சீன அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு
இந்திய பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசு முறை பயணமாக நேற்றிரவு சீனா புறப்பட்டு சென்றார். சீனாவில் உள்ள வுகன் நகருக்கு அவர் சென்றடைந்ததும் விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பிரதமர் மோடி வுகன் நகரில் உள்ள ஹூபே அருங்காட்சியகத்தில் இன்று சந்தித்து பேசினார். அங்கு சீனர்களின் பாரம்பரிய நடனம் மூலம் மோடிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து, அருங்காட்சியகத்தில் இன்று மாலை முக்கிய பேச்சுவார்த்தை நடக்கிறது. இந்த பேச்சுவார்த்தையின் போது இருநாடுகளுக்கும் இடையிலான எல்லை பிரச்சினை, டோக்லாம் தகராறு உள்பட பல பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.. ஆனால் இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி எதுவும் இல்லை என இருநாட்டு அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.
மேலும் பிரதமர் மோடிக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் இரவு விருந்து அளிக்கிறார். மத்திய வுகன் பகுதியில் உள்ள கிழக்கு ஏரி விருந்தினர் மாளிகையில் விருந்து நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை (28-ந்தேதி) இரு நாட்டு தலைவர்களும் ஏரிக் கரையில் மொழி பெயர்ப்பாளர்களை மட்டும் வைத்துக் கொண்டு நடந்து செல்வார்கள். அங்கு மறைந்த சீன தலைவர் மாசேதுங் மணிமண்டபத்தை மோடி சுற்றிக் பார்க்கிறார். மேலும், இருவரும் படகு சவாரி செய்ய உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன