சுக்ர யோகம் பொங்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

சுக்ர யோகம் பொங்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

sukraதுர்முகி வருடத்தின் ராஜாவாக சுக்ர பகவான் வருகிறார். எனவே, இந்த தமிழ்ப் புத்தாண்டு சுக்ரனின் ஆதிக்கத்துடன் திகழும். பிருகு முனிவரின் மகன் என்பதால், பார்கவன் என்றொரு பெயரும் அவருக்கு உண்டு. இவருக்கு தேவயானி என்ற மகளும், சந்தன், அமர்கன், த்வஷ்தரன், தாரதன் ஆகிய மகன்களும் உண்டு என்கின்றன புராணங்கள்.

சுக்ரனும், பிரஹஸ்பதியும் ஆங்கிரஸ முனிவரின் குருகுலத்தில் பயின்றார்கள். அங்கே பிரஹஸ்பதிக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்படுவதாகக் கருதிய சுக்ரன், அங்கிருந்து விலகினார். பிறகு கெளதம முனிவரின் சீடரானார். இந்த முனிவரின் வழிகாட்டுதல்படி, கெளதமி நதிக்கரையில் தவமியற்றி சிவனருளால் சஞ்ஜீவினி மந்திரத்தைப் பெற்றார். பின்னாளில் அசுரகுலத்துக்கு குருவாகி அவர்களுக்கு வழிகாட்டினார் என்கின்றன புராணங்கள்.

ரிஷபம், துலாம் ராசிகளின் அதிபதி. மீனத்தில் உச்சமும், கன்னியில் நீச்சமும் பெறுபவர் என்கிறது ஜோதிட சாஸ்திரம். சுக்ர தசை வருடம் 20 ஆண்டுகள் ஆகும். தமது தசை நடக்கும் காலத்தில், குறிப்பிட்ட ஜாதகனுக்கு பல்வேறு அதிர்ஷ்டங்களை வாரி வழங்குவார் என்பது பொதுவான கருத்து.

எனினும், பூமியில் பிறக்கும் எல்லோருக்குமே சுக்ர தசை வரும் என்று சொல்ல இயலாது. அப்படியான ஜாதகர்கள், துர்முகி வருடத்தில் சுக்ரனை வழிபட்டு சுப பலன்களைப் பெற்று மகிழலாம்.

வெள்ளிக் கிழமைகளில் இவரை வழிபடுவது விசேஷம். அன்று அதிகாலையில் சுக்ர துதிகளைப் பாராயணம் செய்து வணங்குவதுடன், மாலை வேளையில் பட்டு ஆடைகள், தயிர், பாலாடைக் கட்டி, வாசனை திரவியங்கள், சர்க்கரை, பசுஞ்சாணம் ஆகிய வற்றை ஏழைப் பெண்களுக்கு தானம் செய்வதால் விசேஷ பலன்கள் ஸித்திக்கும். அத்துடன், கீழ்க்காணும் சுக்ர ஸ்தோத்திரத்தைப் பாராயணம் செய்து வணங்குங்கள்; உங்கள் வாழ்விலும் சுக்ர யோகம் பொங்கிப் பெருகும்.

ஸ்ரீசுக்ர ஸ்தோத்திரம்

ஸுக்ர: ஸுபக்ரஹ: ஸ்ரீமான் வர்ஷக்ருத் வர்ஷவிக்னக்ருத்
ஞானோதயஸ்ச தேஜஸ்வீ யோகீ யோகவிதாம் வர:
தைத்யஸஞ்ஜீவனஸ்ஸுக்ல: தைத்யநேதோஸனா: கவி:
நீதிகர்தா க்ரஹாதீஸ: விஸ்வாத்மா லோகபூஜித:
ஸுக்லமால்யாம்பரதர: ஸ்ரீசந்தன ஸமப்ரப:
அக்ஷமாலாதர: காவ்ய: தமோ மூர்த்திர்தனப்ரத:

கருத்து: சுக்ரபகவான் மங்களமான கிரகம். செல்வ கடாட்சத்துடன் கூடியவர். மழையைத் தருபவரும், தடுப்பவரும் அவரே. ஞான வடிவமும், தேஜஸும் கொண்டவர். யோகி, யோகத்தை அறிந்தவர்களில் சிறந்தவர், அசுரர்களை பிழைக்கச் செய்பவர், அவர்களுக்கு வழிகாட்டுபவர், வெளுப்பாய் இருப்பவர், உசனஸ் என்று பெயர் பெற்றவர், காலத்தை அறிந்தவர், ராஜ நீதியை அருள்பவர், கிரகங்களில் சிறந்தவர்.

உலகுக்கு உயிர் போன்றவர், உலகங்களால் பூஜிக்கப்பட்டவர். வெண்மையான மாலை, வஸ்திரம் ஆகிய வற்றைத் தரித்தவர். சந்தனத்துக்கு ஒப்பான ஒளியை உடையவர், ருத்ராட்ச மாலை அணிந்தவர், காவ்யர், தமோ குணத்தின் உருவமாக இருப்பவர், பொருளைக் கொடுப்பவர். இத்தகு சிறப்புகளைக் கொண்ட சுக்ரதேவனை வணங்குவோம்.

Leave a Reply