சுவைன் காய்ச்சல் எதிரொலி: 14 ஆயிரம் பன்றிகளை கொன்று குவித்த சீன அரசு
சீனாவில் கடந்த சில நாட்களாக சுவைன் காய்ச்சல் மிக தீவிரமாக பரவியிருந்ததை அடுத்து அந்நாட்டில் இருந்த சுமார் 14 ஆயிரம் பன்றிகளை அந்நாட்டு அரசு கொன்று குவித்துள்ளது.
சீனாவில் பன்றிகளுக்கு சுவைன் நோய் தாக்கி இருப்பதால் அதை கட்டுப்படுத்துவதற்காக நோய் அறிகுறி உள்ள பன்றிகளை கொன்று குவித்து வருகிறார்கள். இதன்படி 14 ஆயிரத்து 500 பன்றிகள் இதுவரை கொல்லப்பட்டுள்ளதாகவும், இன்னும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பன்றிகளை கொல்ல சீன அரசு முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது.
இந்த நோய்க்கு தடுப்பு மருந்து இல்லாததால் இந்த நோய் தாக்கினால் சில நாட்களில் பன்றி இறந்துவிடும். நோய் மேலும் பரவாமல் இருப்பதற்கு பாதிக்கப்பட்ட பன்றிகளை கொன்றுவிட வேண்டும். இல்லை என்றால் அவற்றின் மூலம் மற்ற பன்றிகளுக்கும் பரவி விடும்.
எனவே தான் பன்றிகளை அழிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்த நோயினால் சீனாவில் பன்றி பண்ணைகள் கடுமையாக பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பன்றிகளுக்கு ஏற்படும் இந்த காய்ச்சல் மனிதனுக்கு பரவுவதில்லை. அதே நேரத்தில் இவற்றை கட்டுப்படுத்தாவிட்டால் ஏராளமான பன்றிகள் அழிவதுடன் காட்டு விலங்குகளுக்கும் ஆபத்து ஏற்படும். எனவே தான் அதை கட்டுப்படுத்த சீனா தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.