சூப்பர் உமன் சிண்ட்ரோம் – சாதனை அல்ல; சோதனை!
பெண் எப்போதும் அஷ்டாவதானியாக வலம் வர வேண்டியவள். மகளாக, மனைவியாக, அம்மாவாக, பணியிடத்தில் வேலை செய்கிறவராக, வேலை வாங்கும் அதிகாரியாக… இன்னும் பல பொறுப்புகளைத் தலையில் சுமக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பவள். ஒன்றுக்காக இன்னொன்றை விட்டுக்கொடுக்காமல், தான் சுமந்திருக்கும் அத்தனை அரிதார முகங்களையும் லாகவமாகக் கையாள வேண்டியவள்.
நியாயமாகப் பார்த்தால், எடுத்துக்கொள்கிற எல்லா பொறுப்புகளிலும் ‘மிஸ் பர்ஃபெக்ட்’ ஆக இருப்பது சாத்தியமில்லை. ஆனாலும், அதை ஏற்றுக்கொள்கிற மனப்பக்குவம் பல பெண்களுக்கு இருப்பதில்லை. ‘தன்னால் எல்லாம் முடியும்’, ‘எதையும் சிறப்பாகச் செய்ய முடியும்’ என நம்பி, அதற்கான போராட்டத்துக்கும் தயாராகிறார்கள். ஒரு கட்டத்தில் அதற்கு ஈடுகொடுக்க முடியாமல் மனமுடைந்து போகிறார்கள். பல பெண்களையும் பாதிக்கும் இந்த நிலைக்கு ‘சூப்பர்உமன் சிண்ட்ரோம்’ எனப் பெயர் வைத்திருக்கிறது மனநல மருத்துவம். இதன் அறிகுறிகள் எப்படியிருக்கும், யாரை அதிகம் பாதிக்கும், தீர்வுகள் என்ன? விளக்கமாகப் பார்ப்போம்.
‘சூப்பர் மேன்’ என்கிறவர் நிஜத்தில் இல்லை. அது முழுக்கக் கற்பனை எனக் குழந்தைகளுக்குச்சொல்கிறோம். கிட்டத்தட்ட அதே மாதிரியானதுதான் ‘சூப்பர் உமன் சிண்ட்ரோமு’ம். சூப்பர்மேன் மாதிரி தாவுவதும், குதிப்பதும், பறப்பதும் எப்படி நிஜத்தில் சாத்தியமில்லையோ, அதுபோலத்தான் பெண்களுக்கு எல்லாப் பொறுப்புகளிலும் ‘தி பெஸ்ட்’ என்று பெயர் வாங்குவதும். சிறந்த மனைவி, சிறந்த அம்மா, சிறந்த ஊழியர்… என எல்லா இடங்களிலும், எல்லா நேரங்களிலும் சிறந்த பட்டத்துடனேயே வளையவருவது முடியாத காரியம். இது புரியாமல் கற்பனை வாழ்க்கையுடன் போட்டி போடும்போதுதான் பிரச்னையே. விளைவு? மனஅழுத்தம்.
24 மணி நேரத்தில் தூங்கும் எட்டு மணி நேரம் போக, மீதி 16 மணி நேரத்தில் தனது ரோல்களை வேகவேகமாக மாற்றிக்கொண்டே இருக்கிறாள் பெண். ஒன்றில் உண்டாகிற நிறை, குறை அவளது அடுத்த ரோலிலும் பிரதிபலிக்கும். உதாரணத்துக்கு, அலுவலகத்தில் ஏதோ பிரச்னை என வைத்துக் கொள்வோம். வீட்டுக்குப் போனதும் பிள்ளைகளிடம் அந்த எரிச்சல் வெடிக்கும். குழந்தைகளை அடிக்கக்கூடும். அடித்துவிட்டோமே என்கிற குற்ற உணர்வில் இருக்கும்போது, கணவர் வீட்டுக்குள்ளே நுழைவார். அவர் ஏதோ கேட்கப்போக, அடுத்து அவர் மீது கோபம் திரும்பும். இப்படியே இது சுழலும். கடைசியில் மிஞ்சுவது மன அழுத்தம் மட்டுமே. எல்லாவற்றையும் சிறப்பாகச் செய்ய நினைத்தவரை, ஒன்றைக்கூட சரியாகச் செய்ய முடியவில்லையே என்கிற குற்ற உணர்வு வாட்டும். இதுதான் ‘சூப்பர் உமன் சிண்ட்ரோம்.’
ஆண்களுக்கும்தான் ஏகப்பட்ட வேலைகள். அவர்களுக்கு மனஅழுத்தம் வராதா என்று கேட்கலாம். மரபியல் ரீதியாகவே ஆண் அதிகம் உணர்ச்சி வசப்படுவதில்லை. குற்ற உணர்வும் ஆண்களுக்குக் குறைவு. குழந்தை, ஒருவேளை சாப்பிடாவிட்டாலும் அம்மாதான் பதைபதைத்துப் போவாள். அப்பா அலட்டிக்கொள்ள மாட்டார்.
யாரை பாதிக்கும்?
வேலைக்குப் போகிற பெண்கள் என்றில்லாமல், வீட்டிலுள்ள பெண்களுக்கும் ‘சூப்பர் உமன் சிண்ட்ரோம்’ வரும். முதல்முறை அம்மாவாகிற 25 முதல் 35 வயதுப் பெண்களுக்கு, இந்தப் பிரச்னை அதிகம் வரும். குழந்தை பிறந்தபிறகு பெண்ணின் உடல் பலவீனமாகும். ஹார்மோன் மாறுதல்கள் இருக்கும். பச்சிளம் குழந்தையைக் கையில் பார்த்ததும், அதை எப்படிப் பார்த்துக்கொள்ளப் போகிறோம் என்கிற பயம் வரும். குழந்தை அழும்போதெல்லாம் அதைச் சமாதானப்படுத்தி, பாலூட்டித் தூங்க வைக்கும் களைப்பில் அவளுக்கும் அழுகையாக வரும். இன்னொரு பக்கம் தன் குழந்தையை மிச்சிறப்பாக வளர்க்க வேண்டும் என்கிற வைராக்கியம் பிறக்கும். உதவிக்கு அம்மா, மாமியார், அனுசரணையான கணவர் இருந்தால் பிரச்னை இல்லை. அப்படி இல்லாதவர்கள் மன அழுத்தத்திலிருந்து தப்பிக்க முடிவதில்லை. குழந்தை பள்ளிக்கூடம் போகும்போது அங்கேயும் அது எல்லாவற்றிலும் நம்பர் ஒன்னாக இருக்க வேண்டும் என விரும்பி விரட்டுவார்கள். ஐந்து வருடங்களுக்குள் அடுத்தடுத்து இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் பெற்றெடுத்த பெண்ணுக்கும் இப்படிப்பட்ட மன அழுத்தம் அதிகம் வருகிறது.
அறிகுறிகள் எப்படியிருக்கும்?
எல்லாவற்றிலும் ஒருவிதப் படபடப்பு, எந்த வேலையைச் செய்தாலும் அது தவறாகி விடுமோ என்கிற பயம், சின்னச் சின்ன விஷயங்களுக்குக் கூட டென்ஷன், (உதாரணத்துக்கு… குழந்தைக்குக் காய்ச்சல் வந்தால்கூட பயம், குழந்தையைக் குளிப்பாட்டும்போது மூக்கில், காதில் தண்ணீர் போய் ஏதாவது ஆகிவிடுமோ என்கிற பயம்…) இது இப்படியே தொடர்ந்து, ஒரு கட்டத்தில் எரிச்சலாக உருமாறும். கட்டுப்பாடு இழந்து கத்துவது, குழந்தைகளை அடிப்பது, கடைசிக் கட்டமாக தான் எதற்குமே லாயக்கில்லை என்கிற எண்ணத்தில், தற்கொலைக்கு முயற்சி செய்வதுவரை எல்லை மீறும்.
மருத்துவ சிகிச்சை தேவையா?
தேர்வு எழுதும்போது மனதுக்குள் சிறிய படபடப்பு இருக்குமே… அது இருந்தால்தான் நன்றாக எழுத முடியும். அப்படிப்பட்ட படபடப்பு ஓ.கே. ஆனால், அதுவே கேள்வித்தாளைப் பார்த்ததுமே வியர்த்துப் போகிற அளவுக்கு படபடப்பை உண்டாக்கினால் அது அலாரம். கை, கால் நடுக்கம், நெஞ்சு படபடவென அடித்துக் கொள்வது, அளவுக்கதிகமான வியர்வை போன்றவற்றுடன், இவையெல்லாம் உங்களை வேலையே செய்யவிடாமல் தடுத்தால் மருத்துவ ஆலோசனை அவசியம், அவசரம்! பாதிப்பின் தீவிரத்தைப் பொறுத்து, மனநல மருத்துவர் மருந்துகளையும் மனப்பயிற்சிகளையும் பரிந்துரைப்பார். மருந்துகள் எடுத்துக்கொண்டால், பிறகு அதை வாழ்நாள் முழுக்கத் தொடர வேண்டியிருக்குமோ என்ற பயம் தேவையில்லை. பக்க விளைவுகள் இல்லாத தற்காலிகச் சிகிச்சை இது.
உடலளவிலும் பாதிக்கும்
தசைவலி, வயிற்றுவலி, தசைப்பிடிப்பு, காரணமே இல்லாமல் சருமத்தில் தோன்றுகிற எரிச்சல், வேலை ஏதும் செய்யாமலேயே வியர்வை, வயிற்றைப் பிசைகிற மாதிரியான ஒரு மென்சோகம், தூக்கமின்மை அல்லது அதீதத் தூக்கம், சுவாசக்கோளாறு போன்ற பிரச்னைகளுக்கும் ‘சூப்பர் உமன் சிண்ட்ரோம்’ காரணமாகலாம். எனவே, அறிகுறிகளை அலட்சியம் செய்ய வேண்டாம்.
மீள்வது எப்படி?
ஒவ்வொரு பெண்ணும், தனக்கென தினமும் ஒரு மணி நேரத்தைக் கட்டாயம் ஒதுக்க வேண்டும். கால் மணி நேரம் அழகுக்கு; கால் மணி நேரம் ஆரோக்கியம் காக்கும் உடற்பயிற்சிக்கு; மீதி நேரம் தனக்குப் பிடித்த விஷயங்களுக்கு… பாட்டுக் கேட்பது, பக்கத்து வீட்டுப் பெண்ணுடன் அரட்டை அடிப்பது என எதுவாகவும் இருக்கலாம்.
முடியாத விஷயங்களுக்கு ‘நோ’ சொல்லத் தயங்கவே கூடாது. முயற்சி செய்து பார்க்கலாமே என விஷப்பரீட்சை வேண்டாம். உதவி தேவைப்படுகிற விஷயங்களுக்கு மற்றவர்களிடம் உதவி கேட்கத் தயங்க வேண்டாம்.
ஒரு குழந்தைக்கும், அடுத்த குழந்தைக்கும் மூன்று முதல் ஐந்து வருட இடைவெளி இருக்கட்டும்.
குழந்தைகளிடம் உங்கள் கஷ்டங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். ஒரு வயதுக் குழந்தை கூட தன்னால் இயன்ற அளவுக்கு உங்கள் கஷ்டத்தைப் புரிந்து கொள்ளும். உங்களால் எந்தளவு கோபத்தைத் தாங்க முடியும், வேலைகளைச் செய்வதில் உங்கள் உடல்நலம் எந்தளவுக்கு இடம் தரும் என்பதை விளக்கலாம். கஷ்டங்களைப் பகிர்ந்து கொள்வது உங்கள் மனதை லேசாக்கும்.
உங்களைப் பொக்கிஷம் என்று நீங்களே உணருங்கள். உங்கள் மீது உங்களுக்கே கருணை, அன்பு, காதல் எல்லாம் இருக்கட்டும். உங்களைக் குஷிப்படுத்தும் விஷயங்களைச் செய்துகொள்ளத் தயங்க வேண்டாம்.
பீட்சா பிடிக்குமா? சாப்பிடுங்கள். புதிதாக ஒரு சல்வார் வாங்க ஆசையா? வாங்கிப் போட்டுக் கொள்ளுங்கள். சத்தமாகப் பாடத் தோன்றுகிறதா? கவலையே படாமல் பாடி மகிழுங்கள்.
எல்லாவற்றிலும் பர்ஃபெக்ஷன் எதிர்பார்க்காதீர்கள். குழந்தைகளின் படிப்பு, உங்கள் சமையல், வேலை செய்கிறவர்களின் திறமை என எல்லாம் ஓரளவு திருப்தியுடன் அமைந்தால் போதும்.
நீங்கள் இல்லாவிட்டாலும் உங்களைச் சுற்றியுள்ள உலகம் இயங்கும் என்பதை மறந்து விட வேண்டாம்.