செங்கல் செலவைக் குறைக்கும் தொழில்நுட்பம்
இந்தத் தொழிட்நுட்பம் குறைந்த முதலீட்டில் வீடு கட்ட ஏற்றது. அதாவது வீட்டுச் சுவர் எழுப்பும்போது இரு செங்கல்களுக்கு இடையே இடைவெளிவிட்டு, நடுவில் செங்கல் வைக்காமல் கட்டுவது ஆகும். அந்த இடத்தில் இடத்தில் காற்று அடைத்துக்கொள்ளும். இதைத்தான் எலிப்பொறித் தொழில்நுட்பம் என அழைக்கிறார்கள்.
இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினால் 20 முதல் 35 சதவீதம் அளவுக்குச் செங்கல்களைச் சேமிக்கலாம். பூச்சுக் கலவையின் செலவும் 30 முதல் 50 சதவீதம் குறைய வாய்ப்பு உள்ளது. எனவே 9 அங்குல சுவரின் கட்டுமானச் செலவை 20 முதல் 30 சதவீதம் குறைக்க முடியும். வழக்கமான கட்டுமானத்தில் ஒரு கன மீட்டர் சுவரை அமைக்க சூளைச் செங்கல்கள் 550 தேவைப்படும் என்றால் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினால் 470 செங்கற்களே போதும்.
எலிப் பொறி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திச் சுவரை அமைக்கும்போது கட்டிடத்தின் உள்ளே வெயில் காலத்தில் குளுமையாகவும் குளிர்காலத்தில் வெதுவெதுப்பாகவும் இருக்கும். இந்தச் சுவரை அப்படியே விட்டுவிடலாம். மேற்பூச்சோ, வண்ணப்பூச்சோ அவசியமல்ல. பார்ப்பதற்கும் அழகாக இருக்கும். இந்தக் கட்டுமானத் தொழில்நுட்பம் எடையும் தாங்கும். எனவே எடையைத் தாங்கக்கூடிய இடங்களிலும் இதைப் பயன்படுத்தலாம். அறைகளைப் பிரிக்கும் சுவர் எழுப்ப வேண்டிய இடங்களிலும் இந்தப் பாணி கைகொடுக்கும்.
எலிப் பொறிப் பாணியிலமைந்த சுவர்கள் வழக்கமான சுவர்களைவிட 20 சதவீதம் குறைவான எடையையே பூமிக்குக் கடத்தும். எனவே முறையாக இந்தச் சுவரை அமைக்கும்போது அஸ்திவாரச் செலவும் கொஞ்சம் குறையும். அதிகச் செலவு பிடிக்கும் பொருள்களான செங்கல், சிமெண்ட், இரும்பு போன்றவற்றின் உபயோகத்தைப் பெருமளவில் குறைக்க இத்தொழில்நுட்பம் உதவும். சுற்றுச்சூழல் நோக்கில், பசுமை வாயுக்களின் உற்பத்தியையும் எலிப்பொறி தொழில்நுட்பம் குறைத்துவிடும்.
அதிகப் பாதுகாப்பு தேவை என்று நினைத்தால் சுவரின் இடைவெளிகளில் அஸ்திவாரம் வரையிலும் வலுவூட்டப்பட்ட கம்பிகளைப் பயன்படுத்தலாம். பொதுவான கட்டுமான முறையை ஒப்பிடும்போது, சுவர் அமைப்பதில் சிமென்ட் செலவும், செங்கல் செலவும், மணல் செலவும் இதில் குறையும்.