தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன், கடலூரில் 9 வயது சிறுமி ஒருவர் வெளிநாட்டு தனியார் நிறுவன குளிர்பானம் குடித்து உயிரிழந்தார். அதை அடுத்து நேற்று கோவையில் அதே நிறுவன குளிர்பான பாட்டிலில் பிளாஸ்டிக் கழிவுகள் இருந்ததாக புகார் கொடுக்கப்பட்டது. இதனால் சென்னை உள்பட பல நகரங்களில் குளிர்பான கடைகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
சென்னையில் நேற்று உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் இந்த அதிரடி சோதனையில் காலாவதியான குளிர்பான பாட்டில்களை நூற்றுக்கணக்கில் கைப்பற்றினர். இந்த சோதனையில் தடை செய்யப்பட்ட விற்பனை செய்ததையும் அதிகாரிகள் கண்டுபிடித்து அவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர். பறிமுதல் செய்த குளிர்பானங்களை அதிகாரிகள் உடைத்து கீழே கொட்டினர்.
இந்நிலையில் பிரபல நிறுவன குளிர்பான பாட்டில் போன்று போலியாக உள்ளூரிலேயே தயார் செய்யப்படும் பாட்டில்கள் அதிகளவு விற்பனை செய்யபடுவதும் கண்டுபிடிக்கப்பட்டது. போலி குளிர்பான பாட்டில் உற்பத்தி செய்யப்படும் இடங்களை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.