சென்னையில் கனமழை எதிரொலி: சேதம் அடைந்த விபரங்கள் குறித்த தகவல்கள்
சென்னையில் கடந்த நான்கு நாட்களாக விட்டுவிட்டு கனமழை பெய்து வருவதால் பெரும்பாலான இடங்களில் குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
சென்னையில் வெள்ளம் கடலில் கலக்கும் முகத்துவாரப்பகுதியாக உள்ள எண்ணூர் நெட்டுக்குப்பம் முகத்துவாரத்தில் மணல்திட்டு இருப்பதாக பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர். முகத்துவாரத்தில் ஏற்பட்டுள்ள மணல் திட்டால், வெள்ள நீர் கடலில் கலக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும், உடனடியாக மணல் திட்டை அகற்றும் பணியை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அதேபோல் கொருக்குப்பேட்டை தங்கவேல்பிள்ளை கார்டனில் தண்ணீர் தேங்கியுள்ளதாக அந்த பகுதி மக்கள் புகார் கூறியுள்ளனர். மேலும் சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள சுவாமிதில்லை வீதியில் மின்கம்பி பாதுகாப்பு இல்லாத நிலையில் உள்ளதாகவும் உடனடியாக மின்வாரிய ஊழியர்கள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதேபோல் மடிப்பாக்கம் எல்ஐசி நகரில் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதாகவும், துளசிங்கபுரத்தில் 3 நாட்களாக தண்ணீர் தேங்கியும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் என்று அந்த பகுதி மக்கள் புகார் கூறி வருகின்றனர்.
மேலும் சென்னை திருவேற்காடு அருகே காடுவெட்டியில் கனமழையால் தரைப்பாலம் சேதம் அடைந்துள்ளதாகவும், இந்த பாலம் சேதமடைந்துள்ளதால் இந்த பகுதி வழியாக வாகனங்கள் மாவட்ட நிர்வாகம் செல்லத் தடை விதித்தது. வாகன ஓட்டிகள் மாற்றுப்பாதையில் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.