சென்னையில் மீண்டும் மெட்ரோ பணி: முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்!~

சென்னையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மெட்ரோ பணிகள் தொடங்கிய போது அண்ணாசாலை உள்பட பல பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் தற்போது இரண்டாம் வழிப்பாதை மெட்ரோ பணிகள் தொடங்க உள்ளதை அடுத்து சென்னையின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:

சென்னை பெருநகர காவல்துறை போக்குவரத்து தெற்கு மாவட்ட எல்லைக்குட்பட்ட கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் சந்திப்பிலிருந்து போரூர் சந்திப்பு வரை ஆற்காடு சாலை வழியாக சென்னை மெட்ரோ இரயில் 2ம் கட்டபணி துவங்கவுள்ளது. இதன் காரணமாக 17.08.2021 அன்று காலை 06.00 மணிமுதல் 22.00 மணி வரையில் பரிச்சார்த்த முறையில் கீழ்கண்ட போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்ளப்படுகின்றது.

* போரூர் மார்க்கத்திலிருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் செல்லும் வாகனங்கள் வழக்கம் போல் ஆற்காடு சாலையில் செல்லலாம். இவ்வாகனங்களுக்கு எவ்வித போக்குவரத்து மாற்றமும் செய்யப்படவில்லை.

ஆற்காடு சாலையில் 80 அடி சாலை சந்திப்பிலிருந்து கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் சந்திப்பு வரை ஒருவழி பாதையாக மாற்றப்படவுள்ளது.

கோடம்பாக்கம் மேம்பாலம் மார்க்கத்திலிருந்து சாலிகிராமம், போரூர் நோக்கி செல்லும் வாகனங்கள் ஆற்காடு சாலையில் பவர் ஹவுஸ் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி அம்பேத்கர் சாலை, அசோக்நகர் 2வது அவின்யூ சாலை, பி.டி.ராஜன் சாலை, ராஜமன்னார் சாலை, 80 அடி சாலை வழியாக ஆற்காடு சாலை செல்லலாம் மற்றும் வன்னியர் சாலை வழியாக விருகம்பாக்கம் செல்லலாம்.

கோடம்பாக்கம் மேம்பாலத்திலிருந்து வடபழனி சந்திப்பிற்கு செல்ல வேண்டிய வாகனங்கள் ஆற்காடு சாலையில் பவர் ஹவுஸ் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி அம்பேத்கர் சாலை, அசோக்நகர் 2வது அவின்யூ சாலை, ஜவஹர்லால் நேரு 100 அடி சாலை வழியாக வடபழனி சந்திப்பை அடையலாம்.

போரூர் மார்க்கத்திலிருந்து கே.கே.நகர் செல்லும் வாகனங்கள் 80 அடி சாலையில் வலதுபுறம் திரும்பி இராஜமன்னார் சாலையில் இடதுபுறம் திரும்பி பி.டி.ராஜன், இராஜமன்னார் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி கே.கே.நகர் காவல் நிலையம் வழியாக கே.கே.நகர், உதயம் செல்லலாம். அசோக் பில்லர் மார்க்கத்திலிருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் நோக்கி செல்லும் வாகனங்கள் அம்பேத்கர் சாலையில் அசோக்நகர் காவல் நிலையம் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி அசோக்நகர் 2வது அவின்யூ சாலை, ஜவஹர்லால் நேரு 100அடி சாலை, ஆற்காடு சாலை வழியாக கோடம்பாக்கம் மேம்பாலம் செல்லலாம்.

வடபழனி சந்திப்பிலிருந்து தியாகராயநகர் நோக்கி செல்லும் வாகனங்கள் துரைசாமி சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்பி துரைசாமி சாலை, 2வது அவின்யூ சாலை, நேராக 8வது தெரு, 3வது அவின்யூ,வில் இடதுபுறம் திரும்பி 4வது அவின்யூ சந்திப்பு வழியாக தியாகராயநகர் செல்லலாம்.

கே.கே.நகரிலிருந்து பி.டி.ராஜன் சாலை வழியாக வரும் வாகனங்கள் ராஜமன்னார்- பி.டி. ராஜன் சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்பி ஜவஹர்லால் நேரு 100 அடி சாலை, 2வது அவின்யூ செல்ல அனுமதி இல்லை. மாறாக இடதுபுறம் திரும்பி ராஜமன்னார் சாலை, 80 அடி சாலை வழியாக ஆற்காடு சாலை சென்றடையலாம்.

வன்னியர் தெருவிலிருந்து ராஜமன்னார் சாலையில் வரும் வாகனங்கள் நேரே செல்லஅனுமதி இல்லை. மாறாக 80 அடி சாலை வழியாக ஆற்காடு சாலை சென்று செல்லவேண்டிய இடத்திற்கு செல்லலாம் அல்லது கே.கே.நகர், உதயம் வழியாக செல்லலாம்.

முனுசாமி சாலை கோயம்பேடு மார்க்கெட்டிலிருந்து வடபழனி மேம்பாலம் சர்விஸ் சாலையில் வரும் வாகனங்கள் வடபழனி சந்திப்பில் நேராக செல்ல அனுமதி இல்லை. வழக்கம் போல இடதுபுறம் திரும்பி ஆற்காடு சாலை சென்று துரைசாமி சாலை வழியாக அசோக் பில்லர் நோக்கி நேராக செல்லலாம்.

சாலிகிராமத்திலிருந்து கோடம்பாக்கம் நோக்கி செல்லும் வாகனங்கள் ஒருவழி பாதையில் வரும்பொழுது பேருந்து மற்றும் வணிக வாகனங்கள் சாலையின் இடதுபுற ஓடுதளத்திலும், (Left Lane), இலகுரக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் அனைத்தும் சாலையின் வலதுபுற ஓடுதளத்தில் (Right Lane) செல்ல வேண்டும். கனரக வாகனங்கள் மற்றும் வணிக வாகனங்கள் சாலையின் வலதுபுற ஓடுதளத்தில் (Right Lane) செல்லக்கூடாது.”

இவ்வாறு சென்னை மாநகராட்சியின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை, மெட்ரோ, போக்குவரத்து,