சென்னை குடிநீர் ஏரிகளில் 91.8 சதவீதம் தண்ணீர்

ஊத்துக்கோட்டை:

சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன் கோட்டை தேர்வாய்கண்டிகை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மி.கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். வடகிழக்கு பருவமழை மற்றும் மாண்டஸ் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த மழை கொட்டியது. இதனால் குடிநீர் வழங்கும் 5 ஏரிகளிலும் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. தொடர்ந்து பலத்த மழை கொட்டியதால் பூண்டி ஏரியில் இருந்து அதிகபட்சமாக 10 ஆயிரம் கனஅடி வரை உபரிநீர் திறக்கப்பட்டது. இதேபோல் புழல், செம்பரம்பாக்கம், ஏரிகளில் இருந்தும் குறைந்த அளவு உபரிநீர் வெளியேற்றப்பட்டது. தற்போது மழை இல்லாததால் ஏரிகளில் இருந்து உபரி நீர் திறப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டு உள்ளது.

இன்று காலை நிலவரப்படி குடிநீர் வழங்கும் 5 ஏரிகளிலும் மொத்தம் 10 ஆயிரத்து 793 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 91.8 சதவீதம் ஆகும். இதற்கிடையே ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் கடந்த மாதம் முதல் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது. ஏற்கனவே பூண்டி ஏரி அதன் முழு கொள்ளளவான 35 அடி முழுவதும் நிரம்பி உள்ளதால் அங்கிருந்து புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு இணைப்பு கால்வாய் மூலம் 550 கனஅடி தண்ணீர் அனுப்பப்படுகிறது. இதன் காரணமாக புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் நீர் இருப்பு மேலும் அதிகரித்து வருகிறது.

செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் தற்போது 23 அடியை நெருங்கி உள்ளது. ஏரியின் மொத்த உயரம் 24 அடி. இதில் 22.68 அடிக்கு தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. ஏரிக்கு 246 கனஅடி தண்ணீர் வருகிறது. சென்னை குடிநீர் தேவைக்காக 130 கனஅடி வெளியேற்றப்படுகிறது. புழல் ஏரியின் மொத்த உயரம் 21 அடி. இதில் 19.69 அடிக்கு தண்ணீர் உள்ளது. மொத்த கொள்ளளவான 3,300 மி.கனஅடியில் 2,950 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 351 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. குடிநீர் தேவைக்காக 187 கனஅடி நீர் வெளியேற்றப் படுகிறது. பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவான 3,231 மி.கனஅடி முழுவதும் நிரம்பி உள்ளது. ஏரிக்கு 800 கனஅடி தண்ணீர் வருகிறது. 803 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. சோழவரம் ஏரியில் மொத்த கொள்ளளவான 1,081 மி.கனஅடியில் 837 மி.கன அடி தண்ணீரும். கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் மொத்த கொள்ளவான 500 மி.கன அடியில் 486 மி.கன அடி தண்ணீரும் இருப்பது குறிப்பிடத்தக்கது.