சென்னை நில வகைகளை இணைத்த இணையதளம்!
ஒரு மாவட்டத்தில் எந்தெந்த நில வகைகள் உள்ளன. குடியிருப் பகுதிகள், தொழிற் பகுதிகள், வணிகப் பகுதிகள், நீர் நிலைப் பகுதிகள் எவை எனப் பிரிக்கப்பட்டு வகைப்படுத்தப்பட்டிருக்கும். இதைக் கொண்டுதான் எதிர்காலத்தில் உள் கட்டமைப்புப் பணிகளுக்கு அனுமதி அளிப்பது போன்ற பணிகளை அரசு மேற்கொள்ளும். தற்போது ஆன்லைன் சேவை அதிகரித்து வரும் நிலையில் சென்னைப் பெருநகரில் இரண்டாவது முழுமைத் திட்டம் (மாஸ்டர் பிளான்) மூலம் நிலப் பரப்பின் வகைகளை இணையதளம் வாயிலாக அறிந்துகொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சென்னைப் பெருநகரப் பகுதியில், 2026-ம் ஆண்டு வரை ஏற்படக்கூடிய வளர்ச்சியையும், மாற்றங்களையும் கருத்தில்கொண்டு இரண்டாவது முழுமைத் திட்டம் கடந்த 2008-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின்படி பொருளாதாரம், போக்குவரத்து, உறைவிடம், உள்கட்டமைப்பு, திடக்கழிவு மேலாண்மை, ஒருங்கிணைந்த கழிவு நீர் வடிகால் அமைப்பு, பேரிடர் மேலாண்மை, சுற்றுச்சூழல், நிலப் பயன்பாடு குறித்த திட்டமிடல் ஆகியவை குறித்த தற்போதைய நிலை எப்படி இருக்கின்றன, 2026-ம்
ஆண்டுவாக்கில் இவற்றில் ஏற்படக்கூடிய வளர்ச்சி, அதற்குத் தேவையான திட்டங்கள் என்னென்ன போன்ற பரிந்துரைகள் இந்தத் திட்டத்தில் தெரிவிக்கப்பட்டன.
இந்தப் பரிந்துரைகளைச் செயல்படுத்துவதற்கான வழிமுறைகளை உருவாக்கவும், பொருளாதாரம் மற்றும் வேலை வாய்ப்புக் குழு, நிலப் பயன்பாடு மற்றும் சுற்றுச்சூழல் குழு, போக்குவரத்துக் குழு, உறைவிடம் மற்றும் உள் கட்டமைப்பு குழு, திட்ட முதலீடு மற்றும் ஆளுமை குழு என ஐந்து குழுக்களும் அமைக்கப்பட்டன. இந்தத் திட்ட விதிமுறைகளின்படி இந்தக் குழுக்கள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கூடி, புதிய திட்டங்களுக்கான பரிந்துரைகளை வழங்க வேண்டும், முழுமைத் திட்டத்தில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து முடிவுகள் எடுக்க இத்திட்டத்தை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மறு ஆய்வு செய்ய வேண்டும் என விதிமுறைகளும் வகுக்கப்பட்டன. ஆனால், இத்திட்டம் நீண்ட காலமாகவே கிடப்பில் கிடந்தது. குழுக் கூட்டங்கள்கூட நடைபெறாமலேயே இருந்தன.
தற்போது இந்தப் பணிகள் சூடுபிடித்துள்ள நிலையில், சென்னை பெருநகரப் பகுதியில் ஒட்டுமொத்த நிலப்பகுதி, ஆதாரக் குடியிருப்புகள், வணிகம், தொழில், நீர் நிலை பகுதிகள், நீர் பிடிப்பு பகுதிகள் எனப் பிரித்து வகைப்படுத்தப்பட்டுள்ளன. இனி இதன் அடிப்படையில் வீடுகள், அடுக்குமாடிகள் மற்றும் வணிகம் சார்ந்த கட்டமைப்புகள் போன்ற புதிய கட்டுமானத் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படிப் பிரிக்கப்பட்டுள்ள நில வகைகளைப் பொதுமக்கள் அறிந்துகொள்வதில் சிக்கல்கள் இருந்தன. தற்போது இந்தச் சிக்கல்கள் களையப்பட்டுள்ளன. சி.எம்.டி.ஏ.வின் (சென்னைப் பெரு நகர வளர்ச்சிக் குழுமம்) இணையதளம் மூலமாக, சென்னையின் நில அமைப்பு மற்றும் அவற்றின் வகைகள் பற்றித் தொகுக்கப்பட்டுள்ளன. இதன்படி தேசிய தகவல் மையத்தின் உதவியுடன் புதிய மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. நிலங்களின் தன்மை இதில் குறிப்பிடப்பட்டுள்ளன. தற்போது சென்னைப் பெரு நகர நில வகைப்பாடு சி.எம்.டி.ஏ. இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
இதன்மூலம் தங்கள் பகுதியில் உள்ள நிலம் எந்த வகைப்பாட்டில் பிரிக்கப்பட்டுள்ளது என்ற விவரத்தைப் பொதுமக்கள் அறிந்துகொள்ள முடியும். மேலும் புதிதாக வீடு அல்லது மனை வாங்க உத்தேசித்துள்ளவர்கள் குறிப்பிட்ட இடத்தில் என்னென்ன நில வகைகள், நீர் நிலைப் பகுதிகள் உள்ளன போன்றவற்றை அறிந்து, அதற்கேற்ப முடிவு செய்து வாங்கிக்கொள்ளவும் முடியும். இந்தத் தரவுகளை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும் முடியும். மேலும் விவரங்களுக்கு http://www.cmdamaps.tn.nic.in/ என்ற இணையதளத்தைப் பாருங்களேன்!.