சென்னை புத்தகக்காட்சியில் அதிகம் விற்ற புத்தகம் எது தெரியுமா ?
நடந்து முடிந்த சென்னை புத்தகக்காட்சியில் ஒரு பெரிய புத்தகம் அதிகம் விற்று சாதனை செய்துள்ளது. அப்படி அதிகம் விற்ற புத்தகம் எது தெரியுமா ? அதிகம் மட்டுமில்லை ஒரே புத்தகக்காட்சியில் இரண்டு பதிப்புகளும் விற்று சாதனை படைத்துள்ளது பெரியார்தான். ஆம் நண்பர்களே, விடியல் பதிப்பகத்திடம் இருந்து ‘பெரியார் இன்றும் என்றும்’ என்ற புத்தகம் வெளியாகியுள்ளது. இந்தப் புத்தகம் அளவில் மிகப்பெரியது. 957 பக்கங்கள் கொண்ட இந்த பெரும் புத்தகத்தில் விலை 300 ரூபாய்தான். சமுதாயம், மதம், கலைகள், சாதி, தேசியம் என 21 தலைப்புகளில் பெரியாரின் எழுத்தும் பேச்சும் வகை பிரிக்கப்பட்டுள்ளது. வலுவான கெட்டி அட்டையுடன் வெளிவந்திருக்கும் இந்தப் புத்தகத்தில் இருந்து சில குறிப்பிடத்தகுந்த வரிகள்….
“மொழி உணர்ச்சி இல்லாதவர்களுக்கு நாட்டு உணர்ச்சியோ, நாட்டு நினைவோ எப்படி வரும்? நம் பிற்காலச் சந்ததிக்காவது சிறிது நாட்டு உணர்ச்சி ஏற்படும்படி செய்ய வேண்டுமானால் மொழி உணர்ச்சி சிறிதாவது இருந்தால்தான் முடியும். அன்றியும் சமுதாய இனஉணர்ச்சி சிறிதாவது இருக்க வேண்டுமானாலும் மொழி உணர்ச்சி இருந்தால்தான் முடியும்!” (‘விடுதலை’ – 25-07-1972)
“தமிழ் இசையை நாம் ஏன் வேண்டுகிறோம்? எதற்காக நமக்குத் தமிழில் இசை வேண்டுமென்கிறோம்? தமிழ் மொழியை ஏன் வேண்டுகிறோம்? ஸ்காந்தத்தை ‘கந்த புராணம்’ என்றும், கிருஷ்ணனை ‘கிருட்டிணன்’ என்றும், ‘ஹோம் நமஹா என்பதை ‘ஓம் நமோ’ என்றும், நரசிம்ஹமூர்த்தி என்பதை ‘சிங்கமுகக் கடவுள்’ என்றும், தசகண்ட ராவணன் என்பதை ‘பத்துத்தலை இருட்டுத் தன்மையான்’ என்றும் மொழி பெயர்த்துக் கொண்டு வணங்கி, நம்பி, திருப்தி அடையவா என்று கேட்கிறேன்.
தமிழிசைக்கு நாம் கிளர்ச்சி செய்ததானது வீணாகவில்லை. தமிழிசைத் தொழிலாளர்கள் தமிழில் இசை கற்று வருகிறார்கள்; பெரும்பாலும் தமிழில் பாடுகிறார்கள். இசையை நுகர்வோரும் தமிழில் இசை வேண்டுமென்று விரும்புகிறார்கள். இனி இந்த உணர்ச்சி குன்றிவிடாது. இசை விருந்தளிக்கும் செல்வவான்களும், நுகர்வோர்களும் தமிழுணர்ச்சி உள்ளவர்களாக இருக்கும் வரை, இந்த உணர்ச்சி வலுத்துக் கொண்டே போகும். இசை, நடிப்பு ஆகியவை எதற்குப் பயன்படுகின்றன? ஏதாவது ஒரு கருத்தை ஒரு சேதியைக் காட்டுவதற்கும், அதை மனதில் பதிய வைப்பதற்கும் அது வெறும் வாக்கியத்தில் இருப்பதை இசை இன்பத்தோடும், நடிப்பு இன்பத்தோடும் மனதிற்குள் புகுத்துவதற்கும் ஆகவே முக்கியமாய் இருந்து வருகின்றன.
“எழுத்துக்களில் எவ்வளவு மாறுதல் செய்து வருகிறார்கள்! ரஷ்யாவில் சில பழைய எழுத்துக்களை எடுத்துவிட்டார்கள். புதிய எழுத்துக்கள் சேர்த்தார்கள். அமெரிக்காவில் எழுத்துக் கூட்டுவதாகிய ஸ்பெல்லிங் (Spelling) முறையை மாற்றி விட்டார்கள். துருக்கியில் துருக்கி மொழிக்கு உண்டான எழுத்துக்களையே அடியோடு எடுத்து விட்டு ஆங்கில எழுத்துக்களை ஏற்படுத்திக் கொண்டார்கள். தமிழர்கள் தமிழுக்காக நமக்கு விவரம் தெரிந்த காலமாய் என்ன காரியம் செய்தார்கள்? காலத்துக்கு ஏற்ற மாறுதலுக்கு ஒத்துவராதவன் வெற்றி கரமாய் வாழ முடியாது; மாறுதலுக்கு மனிதன் ஆயத்தமாய் இருக்க வேண்டும். முன்னேற்றம் என்பதே மாறுதல் என்பதை உணர்ந்த மனிதனே உலகப் போட்டிக்குத் தகுதியுடையவனாவான்.
தமிழ் எழுத்துக்களில் ஒரு சில மாற்றம் செய்தேன். அநேக பண்டிதர்கள் எனக்கு நன்றி செலுத்தி என்னைப் பாராட்டினார்களே அல்லாமல், ஒருவராவது, அம்முயற்சிக்கு ஆதரவளித்தவர்கள் அல்ல.
இவ்வளவு பெரிய காரியத்தைச் செய்ய நான் தகுதியற்றவன் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் தகுதி உள்ள வேறு எவரும் வெளிவராவிட்டால் என்செய்வது? ஆனாலும், நான் அம்முறையிலேயே பத்திரிகைகள் நடத்துகிறேன். அம்முறையிலேயே பல புத்தகங்களும் வெளியிட்டிருக்கிறேன். இன்னும் எவ்வளவோ செய்ய வேண்டி இருக்கிறது,
எப்படி ஆனாலும் தமிழ் மொழி உணர்ச்சி தமிழ் மக்களுக்கு இன்றியமையாதது. அதன் மூலம் தமிழ்மக்கள் ஒன்று சேர வசதி உண்டு.”
“கிறுத்துவர்கள் காலத்தைக்காட்டக் கிறித்துவ ஆண்டு (கி.பி.) இருக்கிறது. முசுலிம்கள் காலத்தைக்காட்ட இசுலாம் ஆண்டு (ஹிஜ்ரி) இருக்கிறது. இதுபோல, தமிழனுக்கு என்ன இருக்கிறது? இதற்குத் தமிழனின் ஆதாரம் என்ன இருக்கிறது? மற்றும், இப்படியேதான் தமிழனுக்குக் கடவுள், சமயம், சமயநூல், வரலாற்றுச் சுவடி, இலக்கியம் முதலியவை என்று சொல்ல எதுவும் காண மிகமிகக் கஷ்டமாக இருக்கிறது.
இப்படிப்பட்ட நிலையில், தமிழர் விழா (பண்டிகை) என்பதாக நான் எதைச் சொல்ல முடியும்? ஏதாவது ஒன்று வேண்டுமே! அதை நாம் கற்பிப்பது என்பதும், எளிதில் ஆகக் கூடியது அல்லவே என்று கருதி பொங்கல் பண்டிகை என்பதைத் தமிழன் விழாவாகக் கொண்டாடலாம் என்று முப்பது ஆண்டுகளுக்கு முன் நான் கூறினேன். மற்றும் யாராவது கூறியும் இருக்கலாம்.
இந்தப் பண்டிகையும் அறுவடைத் திருவிழா (Harvest Festival) என்ற கருத்தில்தானேயொழிய, சங்கராந்திப் பண்டிகை, போகிப் பண்டிகை, இந்திர விழா என்று சொல்லப்படும் கருத்தில் அல்ல.
இந்தப் பொங்கல் பண்டிகையைத் தமிழர் எல்லோரும் கொண்டாட வேண்டும். “
இப்படி தமிழ், தமிழர், தமிழ்க் கலாச்சாரம் என்று பல விஷயங்கள் பற்றிய பெரியாரின் கருத்துகள் காலங்கடந்தும் நாம் சிந்தனைக்கு உரியவையே.
நடந்து முடிந்த சென்னை 40வது புத்தகக் காட்சியில் இந்தப் புத்தகம் அதிகம் விற்பனை ஆனதற்கு மக்கள் பதிப்பாக 300 ரூபாய்க்கு வெளியானதுதான் காரணம் என்று சொல்லப்படுகிறது. ஆனாலும், அந்தப் பதிப்பு உடனே விற்றுத் தீர்ந்துவிட, அதற்குப் பிறகும் விற்பனை குறையவில்லை. பெரியாரின் சீர்திருத்தக் கருத்துகளுக்கு என்றைக்கும் மக்களிடம் வரவேற்பு உண்டு என்பதையே இது காட்டுகிறது.