சென்னை-மதுரை பயணம் ஆறரை மணி நேரம் மட்டுமே: வருகிறது அதிவேக தேஜா ரயில்

சென்னை-மதுரை பயணம் ஆறரை மணி நேரம் மட்டுமே: வருகிறது அதிவேக தேஜா ரயில்

சென்னையிலிருந்து மதுரைக்கு ஆறரை மணி நேரத்தில் சென்றடையும் வகையில், வெகுவிரைவில் அதி நவீன சொகுசு வசதிகளை கொண்ட தேஜஸ் அதிவிரைவு ரயில் இயக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த ரயிலை தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட சென்னை ஐசிஎப் பொதுமேலாளர் மணி இதுகுறித்து கூறியபோது, ‘தேஜஸ் ரயிலின், அதிநவீன வசதிகளுடன் கூடிய பெட்டிகள், முழுக்க, முழுக்க சென்னை ஐசிஎப் தொழிலகத்திலேயே தயாரிக்கப்பட்டது. மொத்தம் 23 பெட்டிகளை கொண்ட இந்த தேஜஸ் விரைவு ரயிலில், 18 குளிர்சாதனவசதியுடன் கூடிய இருக்கை வசதி பெட்டிகளும், இரண்டு உயர்வகுப்பு பெட்டிகளும், 3 டீசல் ஜெனரேட்டர் பெட்டிகளும் உள்ளன.

தேஜஸ் ரயிலின் பெட்டிகள், சொகுசான இருக்கைகள் மற்றும் அழகிய உட்புறம் கொண்டவையாகும். விமானத்தைப் போன்று, ஒவ்வொரு இருக்கையின் பின்புறமும் பாடல்கள், வீடியோக்கள் மற்றும் தகவல்கள் அறியும் பொருட்டு சிறிய வீடியோ திரைகள் பொருத்தப்பட்டுள்ளன.

ரயில்பெட்டியின் உள்புறமும் வெளிப்புறமும் தானியங்கி கதவுகளும், பயணிகள் இருக்கைகளின் கைப்பிடியில் உள்புறம் மடக்கி அமைக்கப்பட்டுள்ள சிற்றுண்டி மேசைகள் பொருத்தப்பட்டுள்ளன. இருக்கைகளின் பின்புறம் செல்போன் சார்ஜிங் செய்ய வசதியாக யுஎஸ்பி அமைப்பு கழிவறை கண்ணாடிகளில் உள்ளமைந்த தொடுதிறன் சுவிட்ச் கொண்ட எல்ஈடி விளக்கு ஆகியவற்றை உள்ளடக்கியதாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

உயர்வகுப்பு குளிர் வசதி இருக்கை ரயில்பெட்டிகளில் ஒரு பெட்டிக்கு 56 பயணிகளும், இதர குளிர் வசதி இருக்கை ரயில்பெட்டிகளில் ஒரு பெட்டிக்கு 78 பயணிகளும் பயணிக்கலாம்.

சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு, ஆறரை நேரத்தில் செல்லும் வகையில், இந்த தேஜஸ் அதிவிரைவு ரயில் இயக்கப்பட உள்ளது. காலை 6 மணியளவில், மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில், தேஜஸ் ரயில் இயக்கப்படும். முதலில், சிறப்பு ரயிலாக இயக்கப்பட்டு, பின்னர், நாள்தோறும், சென்னை – மதுரை வழித்தடத்தில் பயணிக்கத் தொடங்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

Leave a Reply