சென்று வா சுஜித்!! விஞ்ஞானம் எல்லாம் வீணா?

சென்று வா சுஜித்!! விஞ்ஞானம் எல்லாம் வீணா?

திருச்சி அருகே நடுக்காட்டுப்பட்டி என்ற கிராமத்தில் வசித்து வந்த சுஜித் என்ற 2 வயது சிறுவன் கடந்த வெள்ளியன்று தன்னுடைய வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்தான்

முதலில் பத்தடி ஆழத்தில் மட்டுமே இருந்த சுஜித் மிக எளிதில் மீட்பு படையினர் மீட்டு இருக்கலாம். ஆனால் சரியாக திட்டமிடப்படாத மீட்புப் பணியால் சுஜித் நேரம் ஆக ஆக ஆழ்துளை கிணற்றின் ஆழத்தில் செல்ல தொடங்கினார்

முதலில் பத்தடி ஆழத்தில் இருந்த சிறுவன் திடீரென 26 அடிக்கும் அதன் பின்னர் 86 அடிக்கும் சென்றுவிட்டதால் சுஜித்தை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. சுஜித்தை மீட்க கயிறு கட்டி இழுக்கும் முயற்சி உட்பட பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அந்த முயற்சிகள் தோல்வி அடைந்ததை அடுத்து ஆழ்துளை கிணறு அருகே ஒரு குழி தோண்டி அந்தக் குழியிலிருந்து ஒரு பாதை அமைத்து சிறுவனை மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன

இதற்காக 90 அடிக்கு மேலாக நவீன விஞ்ஞான கருவிகளை வைத்து குழி தோண்டப்பட்டது இருப்பினும் நிலையில் பாறைகள் இருந்ததால் குழி தோண்டும் பணி சவாலாக இருந்தது மேலும் நேரம் கடந்து கொண்டே இருந்ததால் சுஜித்தை உயிரோடு மீட்பதில் பின்னடைவு ஏற்பட்டது

இந்த நிலையில் 46 அடிகள் தோண்டிய இயந்திரம் பின்னர் திடீரென பழுதானால் மாற்று இயந்திரம் வரவழைக்கப்பட்டு அந்த இயந்திரம் தோண்டி கொண்டிருந்த நிலையில் நேற்று நள்ளிரவு சிறுவன் விழுந்த ஆழ்துளை கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக தெரியவந்தது. இதனை அடுத்து சுஜித் உயிர் இழந்து விட்டதை அதிகாரிகள் உறுதி செய்தனர்

அதன் பின்னர் தேசிய மீட்பு படையினர் சுஜித்தின் உடலை மீட்க போராடினர். சுமார் இரண்டு மணிநேரத்திற்கு பின்னர் சுஜித் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. இதன் பின்னர் மணப்பாறை அரசு மருத்துவமனையில் சுஜித்தின் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது

பிரேத பரிசோதனைக்கு பின்னர் சுஜித்தின் உடல் அவனது பெற்றோரிடம் ஒப்படைக்கப் படும் என தெரிகிறது

21ஆம் நூற்றாண்டில் பல விஞ்ஞான கருவிகளை கண்டுபிடித்த மனிதன், ஆழ்துளை கிணற்றில் விழுந்த ஒரு சிறுவனை உயிருடன் மீட்க ஒரு கருவி கண்டுபிடிக்கவில்லை என்பது வெட்கக்கேடான ஒரு விஷயமாக கருதப்படுகிறது

ஆயிரக்கணக்கான மைல்கள் தூரத்திலுள்ள நிலவுக்கு செயற்கைக்கோள்களை அனுப்பும் முடிந்த நம்மால், ஒரு சில அடிகள் மட்டுமே ஆழத்தில் இருந்த சிறுவனை உயிருடன் மீட்க முடியவில்லை என்றால் நமது விஞ்ஞானம் எதற்கு பயன்பட போகிறது? என்று தெரியவில்லை

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் உள்பட பல நவீன கருவிகளை அழிப்பதற்காக உருவாக்கும் மனிதன் ஆக்கப்பூர்வமான ஒரு கருவியை உருவாக்கவில்லை என்றால் மனித இனத்திற்கே வெட்கக்கேடுதான்

சுஜித் உன்னை எங்களுடைய விஞ்ஞானமும் முயற்சியும் காப்பாற்றவில்லை. இனியாவது இதுபோன்ற இன்னொரு விபத்து நடக்காமல் விழிப்புணர்வுடனாவது இருப்போம்.

Leave a Reply