செயலி புதிது: பிரிஸ்மா செயலியில் புதிய வசதி
பிரியர்களின் மனம் கவர்ந்த பிரிஸ்மா செயலி புதிய அம்சங்களோடு தொடர்ந்து மேம்படுத்தப்படுகிறது. இப்போது இந்தச் செயலி புதிய ஃபில்டர் வசதியை அறிமுகம் செய்துள்ளது.
பிரிஸ்மா செயலி, பயனாளிகளின் ஒளிப்படங்களை நவீன ஓவியம் போன்ற தோற்றமாக மாற்றிப் பகிர்ந்து கொள்ள வழி செய்கிறது. ஸ்மார்ட்ஃபோனில் எடுக்கப்பட்ட ஒளிப்படத்தை பிரிஸ்மா செயலியின் ஃபில்டர்கள் மூலம் கலைப்படைப்பாக மாற்றிக்கொள்ளலாம். செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்நுட்பம் இதன் பின்னே இயங்குகிறது.
இந்தப் புதுமையான அம்சத்திற்காக அறிமுகமான வேகத்திலேயே பிரிஸ்மா, ஸ்மார்ட்ஃபோன் பயனாளிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களுக்கான 2016-ம் ஆண்டுக்கான சிறந்த செயலி விருதையும் வென்றது.
பிரிஸ்மா தொடர்ந்து பயனாளிகளைக் கவரும் வகையில் புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. பயனாளிகள் ப்ரொஃபைல் மற்றும் ஃபீட்களைப் பராமரிக்கும் வசதியை அறிமுகம் செய்தது. தற்போது, பயனாளிகள் புதிய ஃபில்டர்களை உருவாக்கிக்கொள்ளும் வசதி அறிமுகம் ஆகியுள்ளது.
இதுவரை, அடிப்படையான ஃபில்டர்களை மட்டுமே பயன்படுத்த முடியும். இப்போது ‘பிரிஸ்மா ஸ்டோர்’ மூலம் அதில் உள்ள ஸ்டைல்களை அணுகி, புதிய ஃபில்டர்களை நாமே உருவாக்கிக்கொள்ளலாம். முதல் கட்டமாக இலவசமாக அறிமுகமாகியுள்ளது. ஆனால் இது கட்டணச் சேவையாகும் வாய்ப்பு உள்ளது.
மேலும் விவரங்களுக்கு: https://prisma-ai.com/