மஹாபாரதம் என்ற இந்த இதிகாசம் முழுக்க முழுக்க தர்மத்தின் ஃபார்முலா. ஒவ்வொரு கதாபாத்திரமும் தர்மத்தின் வாழும் விளக்கங்கள். கலியுக மனிதர்களைக் காட்டும் கண்ணாடி. அத்தகைய உயர்ந்த இதிகாசமான மகாபாரதத்தில் அதிதிகளை உபசரிக்கும் உயர்ந்த தர்மத்தை அதன் பாத்திரங்களே வாழ்ந்து காட்டியுள்ளன. உலகத்தில் வேறெந்த மதத்திலும் வாழ்க்கை தர்மத்தை வாழ்ந்து காட்டி உபதேசிப்பதான ஒரு இதிகாசம் கிடையாது.
பாரதப்போர் பதினெட்டு நாட்கள் நடந்தது. யுத்தம் தொடங்குவதற்கு முன் பகவான் ஸ்ரீக்ருஷ்ணனுக்கும் அர்ச்சுனனுக்கும் இடையே நடந்த உரையாடலே ஸ்ரீமத் பகவத் கீதையாகும்.
நமது உறவினர்களையே கொலைபுரியும் இந்தப் போர் தேவைதானா? என்று அர்ஜுனன் செயலற்ற நிலையில் நின்றிருந்தபோது, “அர்ஜுனா, போர் செய்வதும் தர்மத்தை நிலைநாட்டுவதும் க்ஷத்ரியனான உனது கடமை. உன் கடமையிலிருந்து நீ தவறாதே” என்று எடுத்துரைத்து கடமையாற்றுவதால் அடையக்கூடியதான பூரண நிலையைப் பற்றியும் எடுத்துரைக்கிறார்.
“அர்ஜுனா! தன்னுடைய கடமையில் பற்றுள்ள ஒவ்வொருவனும் பூரண நிலையை அடைகிறான். தன் கடமையைச் செய்து கொண்டே அவனால் எவ்வாறு பூரண நிலையை அடைய முடிகிறது என்பதைச் சொல்லுகிறேன். கேள்.!”
“இந்த உலகில் உள்ள உயிர்கள் எல்லாம் யாரிடமிருந்து தோன்றி உள்ளனவோ,
யாரால் இந்த உலகம் எல்லாம் நிறைந்துள்ளதோ அந்த கடவுளை தனக்குரிய கடமையைச் செய்து கொண்டே வழிபடும் மனிதன் மேன்மை அடைகிறான்.”
“பார்த்தா! சிறப்புடையதாக இல்லாவிட்டாலும், தனக்குரிய கடமையைச் செய்வது, சிறப்போடு மற்றவர்களின் கடமையைச் செய்வதை விட சிறப்பானது. தனக்கு என இயல்பாக விதிக்கப்பட்ட கடமையைச் செய்யும் ஒருவன் துன்பம் அடையமாட்டான்.”
“குந்தியின் மகனே! குறை உள்ளது என்றாலும் தனக்கு என இயல்பாய் அமைந்த கர்மத்தை விட்டுவிடக் கூடாது. தீயைப் புகை சூழ்வது போன்று வினைகள் எல்லாம் கேடுகளால் சூழப்பட்டுள்ளன. அவற்றை நீக்கி நீ உன் கர்மத்தை தவறாது செய்வாய்” என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணர்.
இவ்வாறு ஒரு குருவின் ஸ்தானத்தில் இருந்து அர்ஜுனனுக்கு போதித்தார் ஸ்ரீ க்ருஷ்ணர். அப்படிப்பட்ட அர்ஜுனன் தன் குருவாக இருந்த ஸ்ரீ க்ருஷ்ணரின் செயல் கண்டு பதறிய நாள் ஒன்று வந்தது.
ஸ்ரீ க்ருஷ்ணர் எதை அர்ஜுனனுக்கு போதித்தாரோ அவ்வாறே அவர் வாழவும் செய்ததாலேயே வாழும் கடவுளாக அர்ஜுனன் கண்ணனைக் கைதொழுதான்.
அந்நாட்களில் இரவில் போர் புரியும் வழக்கமில்லை. போர் வீரர்கள் இரவில் ஓய்வெடுப்பார்கள். தேரோட்டிகள் குதிரைகளை கட்டி வைத்து அவைகளுக்குத் தீனியும் போட்டு மறுநாள் போருக்குத் தயார் செய்துகொண்டிருப்பார்கள்.
பகல் முழுக்கப் போரிட்டகளைப்பால் அர்ஜுனன் அன்று நன்கு உறங்கிக் கொண்டிருந்தான்.
ஆனால் பகல் முழுக்கத் தேரோட்டி களைத்திருந்தாலும் கண்ணன் மட்டும் இரவில் ஓய்வு கொள்ளாமல் குதிரைகள்மேல் கவனம் செலுத்துவான்.
வெந்நீர் வைத்து குதிரைகளை நன்கு தேய்த்துக் குளிப்பாட்டி விடுவான். கட்டுக் கட்டாக பச்சை புல் வெட்டி வந்து குதிரைகளுக்கு ஊட்டிவிடுவான். கொள்ளை வேக வைத்து, அதைத் தன் பட்டுத் துணியில் எடுத்து ஒவ்வொரு குதிரைக்கும் தருவான். அவை உண்பதைக் கண்டு மகிழ்வான். குதிரைகள் வயிறார உண்டு முடித்த பிறகு சற்று ஓய்வு எடுத்துக் கொள்ளும். அந்த நேரத்தில் கண்ணன் குதிரைக் கொட்டில் முழுவதையும் சுத்தம் செய்வான். அதற்குள் விடியத் தொடங்கிவிடும். உடனே குதிரைகளைப் பூட்டி போருக்குச் செல்ல தேரைத் தயாராக்கிவிடுவான்.
ஒவ்வொரு நாளும் இப்படியே தொடர்ந்து நடந்து வந்தது.
ஒரு நாள், அர்ஜுனனுக்கு நள்ளிரவில் உறக்கம் கலைந்தான். எழுந்து கண்ணன் தங்கியிருக்கும் பாசறைக்குச் சென்றான். அங்கு கண்ணன் இல்லை. தூங்கி ஓய்வெடுக்காமல் கண்ணன் எங்கு சென்றிருப்பான் என்று எண்ணியவாறு தேடினான் அர்ஜுனன்.
இறுதியில் கண்ணன் குதிரை லாயத்தில், குதிரைகளுக்குப் பணிவிடைகள் செய்து கொண்டிருப்பதைக் கண்டான்.
உடனே ஓடிச் சென்று கண்ணனின் கைகளைப் பற்றிக் கொண்டு, “”கண்ணா! குதிரைகளுக்கு நீதான் பணிவிடை செய்ய வேண்டுமா? வேறு யாரிடமாவது கூறினால் செய்ய மாட்டார்களா?” என்றான்.
“அர்ஜுனா! குதிரைகளை நன்கு பராமரிக்காவிட்டால் தேர் விரைந்து ஓடுமா? பகைவரை வெல்ல முடியுமா? வேறு யாரை யாவது பராமரிக்கச் சொன்னால் அவர்கள் அக்கறையாகக் கவனிப்பார்களா? அது மட்டு மல்ல; இப்போது நடக்கும் போர் முடியும்வரை நாம் மைத்துனன் மார் அல்ல. நீ எஜமானன்; நான் உனக்கு சாரதி. ஆதலால் உன் கடமை போர் செய்வது; என் கடமை தேர் ஓட்டுவது. குதிரைகளைப் பராமரிப்பது சாரதிக்குரிய தொழில்; மறுநாள் போருக்காக நன்கு ஓய்வு எடுத்துக் கொள்வது எஜமானன் தொழில். இருவரின் தொழில்களும் செம்மையாக நடைபெற்றால் தான் போரில் வெற்றி கிட்டும்! அதனால் நீ சென்று ஓய்வெடுத்துக் கொள். என் கடமையைச் செய்யவிடாமல் குறுக்கிடாதே” என்றான் கண்ணன்.
கீதை உபதேசம் கேட்ட நாளைவிட அன்று கண்ணன் செயலாலும் சொல்லாலும் காட்டிய உபதேசம் அர்ஜுனன் நெஞ்சை நெகிழச் செய்தது.
அந்தநாள் முதல் தன் கடமையை சோர்வின்றி மகிழ்வுடன் செய்து வெற்றியைக் குவித்தான் அர்ஜுனன்.
போதனைகளை ஊருக்கெல்லாம் கூறிவிட்டு தான் மட்டும் சொகுசாக வாழும் தலைவர்களைக் கொண்ட இந்த சமூகத்திற்கு ஸ்ரீ க்ருஷ்ணர் ஒரு வாழும் பாடமே! ஆம், மகாபாரதம் வாழும் தர்மம்!
“பார்த்தா! சிறப்புடையதாக இல்லாவிட்டாலும், தனக்குரிய கடமையைச் செய்வது, சிறப்போடு மற்றவர்களின் கடமையைச் செய்வதை விட சிறப்பானது. தனக்கு என இயல்பாக விதிக்கப்பட்ட கடமையைச் செய்யும் ஒருவன் துன்பம் அடையமாட்டான்.”