செலவில்லாமல் வீட்டை அலங்கரிக்கும் வழிகள்
வீட்டை அலங்கரிப்பதற்கு எல்லா நேரங்களிலும் உள் அலங்கார வடிவமைப்பாளரைச் சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை. சில சமயங்களில் வடிவமைப்பாளரின் வேலையை நாமேகூடக் கையில் எடுத்துக்கொள்ளலாம். பெரிய செலவில்லாமல் வீட்டை அலங்கரிப்பதற்குப் புதுமையான வழிகளை இப்போது பலரும் பயன்படுத்துகிறார்கள். நேரமும், ஆர்வமும் இருந்தால் உங்களுடைய வீட்டை எளிதாக அலங்கரித்துவிட முடியும்.
‘ஸ்டிக்கி நோட்’ சுவர்கள்
சுவரொட்டிக்குப் பதிலாக வீட்டின் சுவர்களை அலங்கரிக்க இந்த ‘ஸ்டிக்கி நோட்’ பயன்படுத்தப்படுகிறது. வீட்டின் ‘வால் பேனல்’களை இதைப் பயன்படுத்தி அலங்கரிக்க முடியும். பல வண்ணங்களில் கிடைக்கும் இந்த ‘ஸ்டிக்கி நோட்’ காகிதங்களை இணைத்து சுவரை அழகானதாகவும் வண்ணமயமானதாகவும் உருவாக்க முடியும். உங்கள் முழு படைப்பாற்றல் திறனையும் இந்த ‘ஸ்டிக்கி நோட்’ காகிதங்களை ஒட்டுவதில் காட்டலாம். சாதாரண சுண்ணாம்பு பூசப்பட்டிருக்கும் சுவரில் இந்த அலங்காரத்தைப் பயன்படுத்துவதற்கு முன்னால் சோதித்துப்பார்த்துக்கொள்வது நல்லது.
‘ஸ்டிக்கி நோட்’ காகிதங்களை அப்படியே ஒட்டுவது ஒரு வழி. அப்படியில்லாவிட்டால், ஒரு வண்ணத்தின் பலவித ‘ஷேட்’களை இணைத்து வித்தியாசமான ‘பேட்டர்ன்’களிலும் அவற்றைச் சுவரில் ஒட்டலாம். இதுவும் சுவருக்கு வித்தியாசமான அழகைக் கொடுக்கும்.
செய்தித்தாள் அலங்காரம்
பழைய செய்தித்தாள்களை வைத்துப் பலவிதங்களில் சுவரை அலங்கரிக்க முடியும். ஒருவேளை, நீங்கள் பயண விரும்பியாக இருந்தால், உங்கள் வீட்டின் சுவரில் ஓர் உலக வரைபடத்தைச் செய்தித்தாள்களை வைத்து உருவாக்கலாம். செய்தித்தாள் அலங்காரத்துக்குச் சுவரின் நிறம் வெள்ளையாக இருக்க வேண்டியது அவசியம். மற்றபடி உங்களுக்குப் பிடித்த வடிவமைப்புகளைச் செய்தித்தாள்களை வைத்துச் சுவரில் உருவாக்கலாம்.
அழகான நாற்காலிகள்
உங்களுக்கு நேரமிருந்து, கையால் பின்னும் நூல் வேலை தெரிந்தால் எப்படிப்பட்ட நாற்காலிகளையும் அழகாக மாற்றிவிட முடியும். நாற்காலிகளுக்குப் பல வண்ணக் கம்பளி நூல்களில் உறை தைத்துப் போடலாம். இது மழைக்காலத்துக்கு ஏற்ற அலங்காரம் இது. சாப்பாட்டு மேசை நாற்காலிகளுக்கு மட்டுமல்லா மல் கை வைத்த நாற்காலிகளுக்கும் இது பொருந்தும்.
ஒளிப்படங்கள் அலங்காரம்
வீட்டில் ஒவ்வொரு அறையிலும் சிதறிக் கிடக்கும் ஒளிப்படங்களையெல்லாம் ஒரே மாதிரியான வடிவமைப்பில் இருக்கும் சட்டகத்தில் பொருத்தி ஒரே இடத்தில் மாட்டிவைக்கலாம். சட்டகத்தின் வண்ணங்களை வித்தியாசமாகத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். இப்படி, வீட்டில் ஓர் ஒளிப்படச் சுவரை எளிமையாக உருவாக்கிவிடலாம்.
காகிதச் சுவர் மலர்கள்
உங்களுடைய கைத்திறனைப் பயன்படுத்திக் காகிதங்களில் மலர்களின் வடிவங்களை வெட்டி உங்கள் படுக்கையறைச் சுவரில் ஒட்டலாம். காகித மலர்களை வெவ்வேறு அளவுகளில் வெட்டி ஒட்டுவது அறைக்கு ‘கிளாசிக்’ தோற்றத்தைக் கொடுக்கும்.
வண்ணமயமான மேசை
உங்களுடைய மேசை எந்த வித அலங்கார மும் இல்லாமல் வெறுமையாக இருக்கிறது என்று நினைக்கிறீர்களா? வண்ண வண்ண ‘டேப்’களை வாங்கி வரிசையாக அதன்மீது ஒட்டிவிடுங்கள். மேசை அழுக்காகும் என்று கவலைப்பட வேண்டிய தேவையிருக்காது. அத்துடன், வேலைசெய்யும்போது வண்ணமயமான மேசை உற்சாகத்தைக்கொடுக்கும்.
பிளாஸ்டிக் கரண்டிகளும் விளக்கும்
ஒரு பெரிய காலி தண்ணீர் பாட்டிலை அடிப்பகுதியை வெட்டிவிட்டு எடுத்துக்கொள்ளுங்கள். அதைச் சுற்றி பிளாஸ்டிக் கரண்டிகளின் மேற்பகுதியை மட்டும் வெட்டி ஒட்டவும். இதை அழகான விளக்குத் திரையாகப் (Lamp shade) பயன்படுத்திக்கொள்ள முடியும். இதனுள் விளக்கைப் பொருத்தினால், அற்புதமான வெளிச்சத்தை அறைக்குக் கொடுக்கும்.
காகித இதயங்கள்
பல வண்ணங்களில் வெட்டப்பட்ட காகித இதய வடிவங்களை மெல்லிய நைலான் கயிறுகளில் ஒட்டி ஒரு திரைச்சீலையை உருவாக்கலாம். இதைப் படுக்கையறைச் சுவர்களில் மாட்டலாம். காகிதங்களில் இதய வடிவங்கள் மட்டுமல்லாமல் உங்களுக்குப் பிடித்த எந்த வடிவத்தை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.