சேலம் அருகே இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 8 பேர் பலி
சேலத்திலிருந்து கிருஷ்ணகிரி நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்றும், பெங்களூருவில் இருந்து பாலக்காடு சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்றும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது. பெங்களூருவுக்கு மலர் ஏற்றிச் சென்ற லாரி பழுதடைந்து நெடுஞ்சாலையோரம் நின்றுள்ளது. சேலத்திலிருந்து கிருஷ்ணகிரி நோக்கிச் சென்ற பேருந்தின் ஓட்டுநர் லாரி நின்றதை கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது. கடைசி நேரத்தில் அதைக் கண்ட ஓட்டுநர் அதன் மீது மோதாமல் இருக்க பேருந்தைத் திருப்பியுள்ளார். அப்போது, பேருந்து, லாரி மீது மோதியதுடன் தடுப்பைத்தாண்டி எதிர்ப்புற சாலைக்குச் சென்று மற்றொரு பேருந்து மீது நேருக்குநேர் மோதியது.
இதில் பாலக்காடு நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து தலை குப்புறக் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 2 பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். விபத்தில் காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விபத்துக்குள்ளான பேருந்துகள் கிரேன் மூலம் அகற்றப்பட்டன.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் ரோஹினி, மீட்புப்பணிகளை பார்வையிட்டார்.