ஜி.எஸ்.டி. – மாறாத சிமெண்ட் விலை
இரண்டு வாரங்களுக்கு முன்னால் அசாமில் நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் 178 பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரி விதிப்பு திருத்தியமைக்கப்பட்டது. ஆனால், எதிர்பார்க்கப்பட்ட சிமெண்ட் மீதான வரி விதிப்பில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. இதனால், சிமெண்ட் தொடர்ந்து கூடுதல் விலையில் விற்கும் நிலையே ஏற்பட்டுள்ளது.
மாறாத வரி
சிமெண்டும் ஸ்டீலும் இல்லாமல் எந்தக் கட்டுமானத்தையும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. எப்போதுமே ஸ்டீலைவிட சிமெண்டுக்குச் சற்றுக் கூடுதல் வரி விதிக்கப்படுவது வாடிக்கை. கடந்த ஜூலை மாதம் ஜி.எஸ்.டி. அறிமுகம் செய்யப்பட்டபோதும் அது எதிரொலித்தது. சிமெண்டுக்கு 28 சதவீதமும் இரும்புக்கு 18 சதவீதமும் ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டது. இந்த வரி விதிப்புக்கு எதிராகக் கட்டுமானத் துறையினரும் சிமெண்ட் உற்பத்தியாளர்களும் தொடர்ந்து குரல் எழுப்பி வந்தனர். ஸ்டீல் அளவுக்கு சிமெண்ட் வரியைக் குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இதனால், ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் சிமெண்ட் மீதான வரி விதிப்பில் சற்று மாற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சிமெண்ட் மீதான வரி விதிப்பில் மாற்றம் செய்யப்படவில்லை. இதனால், வழக்கம்போல ஸ்டீலுக்கும் சிமெண்டுக்குமான வரி வித்தியாசங்கள் தொடருகின்றன. ஜி.எஸ்.டி. வரி விதிப்பின்படி சிமெண்ட் விலை குறைவதற்கான வாய்ப்பும் இப்போதைக்கு இல்லை. எனவே, பில்டர்களுக்கான செலவுகள் குறையவும் வாய்ப்பில்லை.
“புதிதாகத் திருத்தியமைக்கப்பட்ட வரிவிதிப்பின்படி ஏசி, வாஷிங்மெசின் போன்ற பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. வரி விதிப்பு குறைந்துள்ள நிலையில், மக்களின் அடிப்படை தேவைகளுள் ஒன்றான வீடு கட்ட உதவும் சிமெண்டுக்கு வரி குறைக்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது. அனைவருக்கும் வீடு, உள்கட்டமைப்பு வசதிகளைப் பெருக்கும் திட்டங்களை மத்திய அரசு முன்னெடுத்து வரும் நிலையில் சிமெண்ட் மீதான வரியைக் குறைத்திருக்க வேண்டும்” என்று சிமெண்ட் உற்பத்தியாளர்கள் கருத்து தெரிவித்தனர்.
ஃபிளை ஆஷுக்குக் குறைப்பு
சிமெண்ட் மீதான வரி விதிப்பு குறைக்கப்படாவிட்டாலும், ஃபிளை ஆஷ் எனப்படும் நிலக்கரி சாம்பலைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரி விதிப்பு 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. 90 சதவீதத்துக்கும் மேலான ஃபிளை ஆஷைப் பயன்படுத்தி தயாரிக்கும் பொருட்களுக்கு மட்டுமே இது பொருந்தும். இதன்படி ஃபிளை ஆஷ் பயன்படுத்தி தயாரிக்கப்படும் போர்ட்லாண்ட் போஸோலனா சிமெண்ட் (Portland Pozzolana Cement -PPC) வகைக்கு வரி விதிப்பு குறைந்திருக்கிறது. இந்த வகை சிமெண்டுக்கான மூலப் பொருட்களின் விலை ஏற்கெனவே அதிகமாக இருந்தது. தற்போது ஜி.எஸ்.டி. வரி குறைப்பு, மூலப் பொருட்களின் விலையை ஈடு செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், ஃபிளை ஆஷ் உள்ளிட்ட மூலப் பொருட்களுக்காகச் செலவிடப்படும் தொகைக்கும் கிடைக்கும் வருவாய்க்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.
இவை தவிர பெயிண்ட் மற்றும் ஸ்டீல் மீதான ஜி.எஸ்.டி. வரி விதிப்பு 18 சதவீதமாகவே தொடர்கிறது. எனவே, வீடு கட்டும்போதும் சிமெண்ட், ஸ்டீல், பெயிண்ட் போன்ற பொருட்களை வாங்கும்போது கூடுதல் தொகையைச் செலவிடும் நிலையில் மக்கள் உள்ளனர். இதேபோல பில்டர்களும் இந்தப் பொருட்களை வாங்க கூடுதல் செலவு செய்ய வேண்டியிருக்கும். இந்தக் கூடுதல் செலவு மக்கள் தலையில் கட்டப்படும் என்பதால், வீடு வாங்குபவர்களுக்கான சுமையும் அதிகரிக்கவே செய்யும்.