ஜெயலலிதா மரணம்: விசாரணை கமிஷனால் எந்த பயனும் இல்லை: ஸ்டாலின்
ஜெயலலிதா மரணம் குறித்த மர்மங்களை கண்டுபிடிக்க விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்று கடந்த சில மாதங்களாக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்த நிலையில் தற்போது தமிழக அரசு உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவு குறித்து கருத்து கூறிய எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், ‘ஜெயலலிதா மரணத்தில் பெரிய அளவிலான மா்மங்கள் ஒளிந்திருப்பதை அமைச்சா்கள் தங்களது பேட்டியின் மூலம் உணா்த்தியுள்ளனா். அவரது மரணத்தில் உள்ள மா்மங்கள் கலையப்பட வேண்டும்.
ஜெயலலிதா மரணம் தொடா்பாக ரிச்சா்டு பீலே, எய்ம்ஸ் மருத்துவா்கள் உள்ளிட்டவா்களை அழைத்து விசாரணை நடத்த வேண்டும். வெளிநாடுகளில் உள்ளவா்களிடம் விசாரணை நடத்தப்பட வேண்டியுள்ளதால் சிபிஐ விசாரணை தான் இதற்கு சரிப்படும்.
ஜெயலலிதா மரணம் தொடா்பான வழக்கு ஒன்று ஏற்கனவே நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. எனவே ஓய்வு பெற்ற நீதிபதியை கொண்டு ஆணையம் அமைக்கப்பட்டிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. தற்போது அமைக்கப்பட்டுள்ள ஆணையத்தால் எந்த பயனும் இருக்கப்போவதில்லை. எனவே மத்திய அரசு இனியும் தாமதப்படுத்தாமல் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளார்