ஜெயலலிதா மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை குறைந்துள்ளது. சோ
தமிழக முதல்வரின் நம்பிக்கைக்கு உரியவராகவும், அரசியல் ஆலோசகராகவும் இருந்த பிரபல பத்திரிகையாளரான சோ, கடந்த சில தினங்களுக்கு முன் உடல்நலம் தேறி வந்துள்ள நிலையில் துக்ளக் பத்திரிகையின் 46-வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டார். இந்த விழாவில் அவர் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் ஜெயலலிதாவையும் தமிழக அரசையும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
அவர் இந்த விழாவில் பேசியதாவது: “தமிழக வாக்காளர்கள், தேர்தலின்போது ஓட்டுக்குப் பணம் பெறுவதை தவிர்க்க வேண்டும். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாகவும், ஊழல் பெருகிவிட்டதாகவும் குற்றச்சாட்டு நிலவுகிறது. அதிமுக ஆட்சியின்போது ரவுடிகள் கட்டுக்குள் கொண்டு வரப்படுவர் என்ற மக்கள் மத்தியில் இருக்கும் நம்பிக்கை சற்றே குறைந்துள்ளது. இருப்பினும், ஜெயலலிதா அரசு முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை போன்ற விவகாரங்களுக்கு தீர்வு கண்டுள்ளது. தமிழகத்தில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது” எனக் கூறினார்.
“வரும் தேர்தலில் தேமுதிகவால் வாக்குகள் சிதற வாய்ப்பிருக்கிறது. தேமுதிக, தொடர்ந்து தனது கட்சிக்கு 8 முதல் 9 சதவீத வாக்குவங்கியை தக்கவைத்துக் கொண்டிருப்பது பாராட்டத்தக்கது. இது குறிப்பிடத்தக்க சாதனை” என்றார்.
அவரை தொடர்ந்து பேசிய பாமக எம்.பி. அன்புமணி, “பாமக ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு சிறப்பு பட்ஜெட் தாக்கல் செய்யும். மதுவிலக்கை அமல் படுத்துவேன்” என்றார்.
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசும்போது, “குஜராத்தில் அமைந்ததுபோல் தமிழகத்திலும் ஓர் ஆட்சி அமைய வேண்டும்” எனத் தெரிவித்தார்.