டவுன் சர்வே நிலப் பதிவேடு என்ன சொல்கிறது?
தமிழகத்தில் வருவாய்த் துறை மூலம் சென்னை உள்ளிட்ட மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுக்குள் உள்ள சொத்துக்களுக்கு நில உரிமை சான்று ‘டவுன் சர்வே நிலப் பதிவேடு’ ஆகும். இது பட்டாவுக்குச் சமம். தற்போது இச்சான்று எழுத்துபூர்வமாக வழங்கப்படுகிறது. விரைவில் இது கணினி மயமாக்கப்படும். தற்போது சென்னையில் உள்ள அனைத்துச் சொத்துகளின் விவரங்களை ஆன்லைன் மூலம் சரிபார்க்கும் வசதி சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டவுன் சர்வே நிலப் பதிவேட்டில் நில உரிமையாளர் பெயர் சொத்தின் அளவு, கதவு எண், தெரு பெயர், பழைய சர்வே எண், புதிய சர்வே எண் போன்ற விவரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். மேலும் இச்சான்றிதழ்களில் சொத்தின் வரைபடம் (Sketch Map) இடம் பெற்றிருக்கும். வரைவாளர் (Draftsman) தலைமை சர்வேயர் மற்றும் தாசில்தாரின் கையொப்பம் இடம் பெற்றிருக்கும்.
இச்சான்று பெறும் முறை:
டவுன் சர்வே நிலப் பதிவேடு பெற முதலில் தாலுகா அலுவலகத்தில் உள்ள குறிப்பிட்ட மனுவைப் பூர்த்தி செய்து தாலுகா வரவேற்பு அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும். இந்த மனுவுடன் மூலப் பத்திரம், தாய்ப் பத்திரம், பழைய நில உரிமைச் சான்று (கையில் இருப்பின்) மற்றும் 30 ஆண்டுகளுக்கான சொத்தின் வில்லங்கச் சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும்.
இந்த மனுவைப் பெற்ற பின் ரசீது வழங்கப்படும் பிறகு ரசீதுடன் சர்வே உதவி ஆய்வாளர் (TDS) அனுக வேண்டும். அந்த அதிகாரி சொத்து இருக்கும் இடத்துக்கு நோpல் சென்று இடத்தைப் பார்வையிட்டுக் கணக்கிடுவார். அந்த சொத்து உட்பிரிவு செய்யும் அவசியம் இல்லையேயானால் சர்வேயர் தாலுகா சர்வே உதவி ஆய்வாளர்களுக்குக் குறிப்பு அனுப்புவார். அந்தக் குறிப்பை இந்த அதிகாரி தலைமை சர்வேயர் (Head Surveyor) அவர்களுக்கு அனுப்புவார். தலைமை சர்வேயர் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களைச் சரிபார்த்துத் துணை வட்டாட்சியர் அல்லது மண்டலத் துணை வட்டாட்சியர் அல்லது வட்டாட்சியாரிடமிருந்து அனுமதி பெற்று மனுதாரருக்கு நில உரிமைச் சான்றிதழ் வழங்க அனுமதி வழங்குவார்.
பிறகு மனுதாரர் ரூ.20ஐ பாரத ஸ்டேட் வங்கியில் செலுத்தி (Treasury) பணம் செலுத்தியதற்கான செல்லானை தாலுகா அலுவலகத்தில் வழங்க வேண்டும். பிறகு தாலுகா அலுவலக ஊழியர் விண்ணப்பதாராரின் சொத்தின் அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்த பின் வரைவாளர் (Draftsman) சான்றிதழின் பின்புறத்தில் சொத்தின் வரைபடத்தைப் (Sketch) பதிவு செய்வார். பிறகு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கையொப்பமிட்ட பின் இச்சான்றிதழ் விண்ணப்பதாராரிடம் வழங்கப்படும். ஒருவேளை சர்வே உட்பிரிவு செய்யுமேயானால் விண்ணப்பதாரர் கூடுதலாக ரூ.120ஐ பாரத ஸ்டேட் வங்கியில் செலுத்தி அதற்கான செல்லானைச் சமர்ப்பிக்க வேண்டும். பிறகு 8A நில உரிமைப் பதிவேட்டில் குறிப்பீடு செய்த பின் மேற்படி உரிமையாளர்களுக்கு நில உரிமைச் சான்றிதழ் வட்டாட்சியர் அலுவலகம் மூலம் வழங்கப்படும்.