டாஸ்மாக் நேரம் குறைப்பால் விற்பனை சரிந்துள்ளதா?
தமிழகத்தின் முதல்வராக மீண்டும் பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதா பதவியேற்ற முதல் நாளில் ஐந்து முக்கிய உத்தரவுகளில் கையெழுத்திட்டார். அவற்றில் ஒன்று டாஸ்மாக் நேரக்குறைப்பு குறித்த உத்தரவு. மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் படிப்படியாக டாஸ்மாக் நேரம் குறைக்கப்படும் என்றும் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்றும் அதன் பின்னர் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்றும் தேர்தலின்போது ஜெயலலிதா வாக்கு கொடுத்திருந்தார்.
அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் நேரம் குறைப்பு மற்றும் 500 கடைகள் மூடுவதற்கும் முதல் நாளில் உத்தரவிட்டார். ஆனால் முதல்வர் என்ன காரணத்திற்காக அந்த உத்தரவை பிறப்பித்தாரோ, அந்த காரணம் நிறைவேறவில்லை என்று தகவல்கள் வெளிவந்துள்ளது. அதாவது 10 மணிக்கு பதில் 12 மணிக்கு திறக்கப்பட்ட போதிலும் விற்பனையில் மாற்றமில்லை என்பது தெரியவந்துள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்கு அருகே ஒரு டாஸ்மாக் மதுபானக் கடை இருக்கிறது. அங்கு செவ்வாய்க்கிழமை (ஜூன் 7) காலை 11.45 மணியளவில் 20 பேர் வரிசையில் காத்திருந்தனர். அக்கடையின் விற்பனை பிரதிநிதி, “இந்தக் கடையில் மது விற்பனையில் எவ்வித சரிவும் ஏற்படவில்லை. வழக்கம்போல் நாளொன்றுக்கு ரூ.4 லட்சத்துக்கு இங்கு மது விற்பனையாகிறது” என்றார்.
சென்னை சூளைமேட்டில் உள்ள மதுபானக் கடையின் மேலாளர் கூறும்போது, “டாஸ்மாக் கடைகளில் மதுபான விற்பனை செய்யும் நேரத்தை குறைத்ததால் எவ்வித தாக்கமும் ஏற்படவில்லை. சிலர் முதல் நாள் இரவே மொத்தமாக மதுபானங்களை வாங்கிக் கொள்கின்றனர். பின்னர் அவர்களே காலையில் அவற்றை அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர்” என்றார்.
இதேபோல் சென்னை தி.நகர், கோடம்பாக்கம், பூந்தமல்லி, கிண்டி, திருவல்லிக்கேணி, வேளச்சேரி, அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளில் விற்பனை விறுவிறுப்பாகவே இருக்கிறது. குறிப்பிட்டுச் சொன்னால் சில இடங்களில் விற்பனை 10 முதல் 15% வரை அதிகரித்திருக்கிறது.
டாஸ்மாக் யூனியன் உறுப்பினர் ஒருவர் கூறும்போது, “பகல் 12 மணிக்கு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டாலும், பார்கள் முன்னதாகவே திறக்கப்பட்டு விடுகின்றன. பார்களில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது” என்றார்.
ஒருசில இடங்களில் மட்டுமே விற்பனை சரிந்துள்ளதாகவும், அந்த பகுதிகளிலும் பார்களில் கள்ளச்சந்தையில் சரக்கு விற்பனை ஆவதால் குடிமகன்களுக்கு தங்கு தடையில்லாமல் சரக்கு கிடைப்பதாகவும் கூறப்படுகிறது.