டாஸ்மாக் வழக்கு:தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், தமிழக டி.ஜி.பிக்கு சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு
டாஸ்மாக் தொடர்பான வழக்கு ஒன்றில் பதில் மனு தாக்கல் செய்யாத தமிழக தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், தமிழக டி.ஜி.பி. ஆகிய மூவருக்கும் ரூ.10,000 வழக்கு செலவாக கட்ட வேண்டும் என சென்னை ஐகோர்ட் நேற்று அதிரடி உத்தரவு ஒன்றாஇ பிறப்பித்துள்ளது.
‘பாடம் நாராயணன்’ என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த டாஸ்மாக் வழக்கு ஒன்றின் தொடர்பாக பதில் மனுதாக்கல் செய்ய தமிழக தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், டாஸ்மாக் நிறுவன நிர்வாக இயக்குனர், தமிழக டி.ஜி.பி. ஆகியோர்களுக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால் டாஸ்மாக் நிறுவன நிர்வாக இயக்குனர் மட்டுமே பதில் மனு தாக்கல் செய்தார். நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணக்கு வந்தபோது தலைமை செயலாளர் உள்பட மூன்று அதிகாரிகளும் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்டனர்.
ஆனால் அவகாசம் கொடுக்க மறுத்த சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் கொண்ட அமர்வு பதில் மனு தாக்கல் செய்யாத மூன்று அதிகாரிகளுக்கும் ரூ.10 ஆயிரம் வழக்கு செலவு விதிப்பதாகவும், அந்த தொகையை ஒரு வாரத்துக்குள் ஐகோர்ட் வளாகத்தில் உள்ள சமரச தீர்வு மையத்துக்கு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கு மூன்று வாரத்திற்கு ஒத்தி வைக்கப்படுவதாக நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.