டிஜிட்டல் மயமாகி வரும் புதுவைப் பல்கலைக் கழகம்

டிஜிட்டல் மயமாகி வரும் புதுவைப் பல்கலைக் கழகம்

முழுமையான வைஃபை வசதி, நவீன கண்காணிப்பு கேமராக்கள், ரொக்கமில்லாப் பணப் பரிவர்த்தனை என புதுவை மத்திய பல்கலை. டிஜிட்டல் மயமாகி வருகிறது.

கடந்த 1985-ஆம் ஆண்டு நாடாளுமன்ற ஒப்புதலுடன் புதுவை மத்திய பல்கலை. தொடங்கப்பட்டது. அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி இதைத் தொடக்கி வைத்தார்.

புதுவையில் இருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ள காலாப்பட்டில் அமைந்துள்ள மத்திய பல்கலை., மொத்தம் 800 ஏக்கர் பரப்பில் பரந்து விரிந்துள்ளது. இதில் தற்போது 37 துறைகள், 15 பள்ளிகள், 10 மையங்கள் மூலம் 175 முதுகலை – இளங்கலை ஆராய்ச்சிப் படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன.

காலாப்பட்டில் உள்ள பல்கலை. வளாகத்தோடு, காரைக்கால், அந்தமான் நிகோபார் தீவிலும் துணை வளாகங்கள் உள்ளன. 2 லட்சம் நூல்கள் கொண்ட நூலகம், 19 மாணவர்கள் விடுதிகள், வைஃபை வசதி கொண்ட வளாகம், 400 பேராசிரியர்கள், விரிவுரையாளர், அலுவலர்கள், 6,100 மாணவ, மாணவிகள் உள்ளனர். மேலும், 87 இணைப்புக் கல்லூரிகளில் 45,000 பேர் பயின்று வருகின்றனர்.

தற்போது நவீன தகவல் தொழில்நுட்ப முன்னேற்றத்துக்கு ஏற்ப மத்திய பல்கலை.யில் பல்வேறு மாற்றங்கள் புகுத்தப்பட்டு வருகின்றன.

ரூ. 9 கோடியில் வைஃபை வசதி: பல்கலை. வளாகம் முழுவதும் வைஃபை வசதியை ஏற்படுத்த ரூ. 9 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கான பணிகளை ரயில்டெல் அரசு நிறுவனம் தொடங்கி உள்ளது. மேலும், நவீன கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்படுகின்றன.

ரொக்கமில்லாப் பணப் பரிவர்த்தனை: இனி மாணவர்கள் தங்களுக்கான கல்விக் கட்டணங்களை வங்கியில் சென்று செலுத்தத் தேவையில்லை. இதற்காக தனி செயலி உருவாக்கப்பட்டுள்ளது. தங்கள் செல்லிடப்பேசியிலேயே தொகையைச் செலுத்தி விடலாம். அதேபோல பல்கலை. ஊழியர்கள் அனைவருக்கும் மின்னணு முறையில் தான் ஊதியம் வழங்கப்படுகிறது.

பயோமெட்ரிக் வருகை பதிவு முறை: பேராசிரியர்கள், ஊழியர்கள், பல்கலை.க்கு வருவோர் தங்கள் வருகையைப் பதிவு செய்ய பயோமெட்ரிக் முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

மாணவிகளின் நலனைக் கருத்தில் கொண்டு புதிதாக 5 மாடிகளுடன் கூடிய நவீன தங்கும் விடுதி ரூ. 14 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது.

பல்கலை.யில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து துணைவேந்தர் அனிஷா பஷீர் கான் கூறியதாவது: தகவல் தொழில்நுட்பத்தின் முழுப் பயன்களும் கிட்டும் வகையில் செயல்பட்டு வருகிறோம். பல்கலை.யில் காகிதப் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்கும் வகையில் முற்றிலும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகிறது என்றார் அவர்.

Leave a Reply