டிரைவிங் செய்யும்போது கவனிக்க வேண்டிய 10 முக்கிய அம்சங்கள்
1. முதலில் நாம் பொறுமை இழப்பது சிக்னல்களில்தான். சிக்னலில் நிற்கும்போது, ஆரஞ்சு விளக்கு எரியும் முன்பே ஆக்ஸிலரேட்டரை முறுக்குவதில் உற்சாகமாக இருக்கும் நாம், சிக்னலில் சிவப்பு விளக்கு எரிய ஆரம்பிக்கும்போது பிரேக் பிடிப்பதற்கு யோசிக்க மறுக்கிறோம். சட்டத்துக்குக் கட்டுப்படுவது ரெண்டாவது விஷயம் – முதலில் மனசாட்சிக்குக் கொஞ்சம் இடம் கொடுக்கலாமே பாஸ்!
2. கிளம்பும்போது, எப்போதுமே கால்மணி நேரம் அல்லது அரைமணி நேரம் முன்கூட்டியே கிளம்பிப் பாருங்களேன். ஆச்சர்யமாக சிக்னலில் நின்றாலும், சிக்கலாக ஃபீல் செய்யமாட்டீர்கள். வெயில் காலத்தில் பொதுவாகவே எல்லோருக்கும் கோபமும், எரிச்சலும் இருக்கும். இந்த நேரத்தில் விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போகமாட்டார்கள்.
3. ‘நான் நல்லா ஓட்டுறேனா… ஏதாவது தப்பு இருக்கா?’ என்று உங்கள் டிரைவிங் ஸ்டைல் பற்றி, உறவினர்கள் அல்லது எக்ஸ்பெர்ட்டுகள் யாரிடமாவது மனம் திறந்து கேளுங்கள். இதிலெல்லாம் ஈகோ பார்க்காதீர்கள்.
4. எப்போதுமே கிளம்பும்போது பசியுடன் கிளம்பாதீர்கள். வெறும் வயிற்றுக்காரர்களுக்கு, வெயில் நேரத்தில் டென்ஷன் வயிறைத் தாண்டி தலை உச்சிக்கு ஏறும். கூடவே, எப்போதும் ஒரு வாட்டர் பாட்டிலை வைத்திருங்கள். தண்ணீர் குடிக்கும்போது கோபம் தணியும் வாய்ப்பிருக்கிறது. யாராவது இடித்துவிட்டால், நம்மையும் மீறி வாக்குவாதம் முற்றும்போது நிறுத்திக் கொண்டு, ‘இன்ஸூரன்ஸ்’ கிளைம் செய்து கொள்ளலாம் என்கிற ரீதியில், பிரச்னைகளை முடிவுக்குக் கொண்டு வரப் பாருங்கள்.
5. எப்போ பார்த்தாலும் ஸ்ட்ரெஸ்ஸிலேயே இருக்காதீர்கள். ‘ச்சே… சீக்கிரம் போய் ஆகணுமே’ என்று கடுப்பாகாமல், என்ஜாய் பண்ணி டிரைவிங் செய்யுங்கள். ‘வாவ்… அதுக்குள்ள வந்துடுச்சா!’ என்று ஆச்சர்யப்படுவீர்கள்.
6. பெரும்பான்மையான விபத்துகளுக்குக் காரணம் – கவனக்குறைவும், பொறுமையின்மையும்தான். ‘எப்படியாவது ஓவர்டேக் பண்ணிடணும்’ என்று அவசரப்படாதீர்கள். எப்போதும் இடது பக்கம் ஓவர்டேக் செய்யாதீர்கள். தேவையானால் மட்டும் ஹார்ன் அடியுங்கள்.
7. யாராவது உங்களை ஓவர்டேக் செய்தால், கோபப்படாதீர்கள். முக்கியமாக குழந்தைகளுடன் வாகனம் ஓட்டிச் செல்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. அவர்கள் முன்பு, தேவையில்லாமல் சண்டை போடாதீர்கள். உங்களுடைய குழந்தையின் எதிர்காலம் முக்கியம்!
8. கிளம்பும்போது வாகனத்தைத் துடைப்பதோடு மட்டும் நிறுத்தாமல் – டயர் பிரஷர், பெட்ரோல், பிரேக் என்று எல்லாவற்றையும் செக் செய்துவிட்டுக் கிளம்புங்கள்.
9. எப்போதும் ரிசர்விலேயே பைக்கை/காரை ஓட்டாதீர்கள். இது முக்கியமான நேரங்களில் டென்ஷனுக்கு வழிவகுக்கும். உங்களை நடுரோட்டில் வண்டி தள்ளவும் வைத்துவிடும்.
10. ஒருவர் விபத்தாகி விழுந்துவிட்டால், தாண்டிப் போகாமல் அவருக்கு மனிதாபிமானத்துடன் உதவுங்கள். பிரச்னைகளை அப்புறம் டீல் செய்யலாம்.