டெங்குவை அழிக்கும் இயற்கை வைத்தியம்!

டெங்குவை அழிக்கும் இயற்கை வைத்தியம்!

8டெங்கு காய்ச்சலைப் பரப்பும் கொசுக்களை அழிப்பது கடினமாக இருந்தாலும், நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ளும் தடுப்பு முறைகளைப் பின்பற்றி டெங்கு காய்ச்சல் வராமல் தப்பிக்க முடியும். டெங்கு காய்ச்சலுக்கான மருத்துவமுறைகள் சித்த மருத்துவத்தில் உள்ளன.

டெங்கு காய்ச்சல் வந்தவருக்கு…

டெங்கு காய்ச்சல் வந்தவர்கள் மட்டுமின்றி, சாதாரண காய்ச்சல் வந்தவர்களும் நிலவேம்புக் கஷாயம் அருந்தலாம். சித்த வைத்திய மருந்துக் கடைகளிலும், அரசு மருத்துவமனைகளிலும் நிலவேம்புக் குடிநீர் கிடைக்கிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, ரத்த தட்டு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்கிறது.

நிலவேம்புக் குடிநீர் தயாரி்க்கும் முறை…

நிலவேம்பு, வெட்டி வேர், விளாமிச்சம் வேர், சந்தனக் கட்டை, பேய் புடல், கோரைக் கிழங்கு, சுக்கு, மிளகு, பப்படம் புல் ஆகியவற்றைச் சமஅளவில் இடித்துப் பொடியாக்கிக்கொள்ள வேண்டும். இரண்டு டேபிள் ஸ்பூன் பொடியை அரை லிட்டர் நீரில் போட்டுக் கொதிக்கவைத்து, கால் லிட்டராகச் சுண்டவைத்து அருந்த வேண்டும். கசப்புச் சுவை நீங்க, கஷாயம் குடித்த பின், பனங்கற்கண்டைச் சுவைக்கலாம்.

டெங்கு வராமல் தடுக்க…

டெங்கு காய்ச்சல் பாதிப்பைத் தவிர்க்க நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க வேண்டும். அதற்கு…

*ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை, நார்த்தம்பழம், நெல்லி ஆகியவற்றைச் சாப்பிடலாம். மழைக் காலத்தில் சளி பிடிக்கும் என நினைத்தால், சர்க்கரைக்குப் பதிலாக உப்பு போட்டுக் குடிக்கலாம்.

*தினமும் உணவில் மிளகு, பூண்டு, மஞ்சள், சீரகம் போன்றவற்றைச் சேர்க்கலாம்.

*நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் மூன்றும் சேர்ந்த திரிபலா சூரணப் பொடியை, ஒன்று அல்லது இரண்டு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து, தினமும் இரவில் படுக்கப்போகும் முன் அருந்துவது மிகவும் நல்லது.

*சீந்தில் கொடியின் தண்டு, வில்வ இலை, துளசி, மஞ்சள், நெல்லிக்காய், பளிங்கு சாம்பிராணி, திப்பிலி ஆகிய மூலிகைகள் நோய் எதிர்ப்புச் சக்தியை சீராக வைத்திருக்க உதவுகின்றன. இவற்றை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

*கொய்யா, நெல்லிக்காய், கீரைகள், காய்ந்த திராட்சை, பேரீச்சை, அத்தி போன்றவற்றை அதிகம் எடுத்துக்கொள்ளலாம். முட்டை, எண்ணெய்ப் பசை அதிகம் உள்ள மத்தி, சால்மன் போன்ற மீன்களைச் சாப்பிடலாம். இவை நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தும்.

ரத்தக் கசிவு வராமல் இருக்க

உணவு உண்ட பிறகு, நெல்லி லேகியம், கரிசாலை லேகியம், இம்பூரல் லேகியம் ஆகியவற்றை ஒரு டீஸ்பூன் சாப்பிடலாம்.

ரத்தத்தில் சிவப்பு அணுக்கள் அதிகரிக்க

பப்பாளி இலைச் சாற்றை 5 – 10 மி.லி வெறும் வயிற்றில் அருந்தினால், டெங்கு காய்ச்சல் குறைந்து, சிவப்பு அணுக்கள் அதிகரிக்கும்.

கொசு வராமல் தடுக்க

*கொசுவை அழிக்கும் எலெக்ட்ரானிக் பேட்களை பயன்படுத்துவதும் ஒரு சிறந்த வழிதான்.

*தரமான, வசதியான கொசுவலைகளைப் பயன்படுத்தலாம்.

*கற்பூரவல்லி மற்றும் கற்றாழைச் சாற்றை எடுத்து, அதைத் தண்ணீரோடு கலந்து ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, வீட்டில் ஸ்ப்ரே செய்யலாம்.

*வீட்டில் நொச்சி, வேப்பிலை, காட்டுத் துளசி, பேய்த் துளசி, அசோலா (கம்மல் பாசி), ரோஸ்மெரி, லெமன் கிராஸ், கற்பூரவல்லி, கற்றாழை போன்ற மூலிகைச் செடிகளை வளர்ப்பதும் நல்லது.

*வியர்வை வாசம் இருந்தால் கொசுக்கள் அதிகம் கடிக்கும் என்பதால், தினமும் இருவேளை குளிப்பது நல்லது.

*மாலையில் வீட்டில் வேப்பிலை எண்ணெய், யூகலிப்டஸ் எண்ணெய், கிராம்பு எண்ணெய் ஆகியவற்றைத் தெளிக்கலாம்.

Leave a Reply