’டைம்ஸ்’ உயர் கல்வி நிறுவனங்களின் தரவரிசை: 62 ஆவது இடத்தில் சென்னை ஐஐடி

’டைம்ஸ்’ உயர் கல்வி நிறுவனங்களின் தரவரிசை: 62 ஆவது இடத்தில் சென்னை ஐஐடி

டைம்ஸ் வெளியிட்டுள்ள ஆசிய அளவிலான தரமான உயர் கல்வி நிறுவனங்கள் பட்டியலில் முதல் 100 இடங்களில் 8 இந்தியக் கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்து, அவற்றுக்கான தரவரிசையை பல்வேறு அமைப்புகள் வெளியிட்டு வருகின்றன. இதுபோல ’டைம்ஸ்’ என்ற அமைப்பின் 2017 ஆம் ஆண்டுக்கான ஆசிய அளவிலான தரவரிசைப் பட்டியல் இப்போது வெளியிடப்பட்டுள்ளது.
இதில் கடந்த ஆண்டைப் போலவே, முதல் 100 இடங்களுக்குள் 8 இந்திய கல்வி நிறுவனங்கள் இடம்பிடித்துள்ளன. இந்தப் பட்டியலின் முதல் இடத்தில் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் உள்ளது. கடந்த ஆண்டும் இந்த கல்வி நிறுவனமே முதல் இடத்தில் இருந்தது. இரண்டாவது இடத்தை சீனாவின் பெகிங் பல்கலைக்கழகம் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு இரண்டாம் இடத்திலிருந்த சிங்கப்பூரின் நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் இம்முறை 4 ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. பட்டியலில் மூன்றாம் இடத்தை சீனாவின் சிங்குவா பல்கலைக்கழகம் பிடித்துள்ளது.
பட்டியலில் 27-ஆவது இடத்தில் பெங்களூரு இந்திய அறிவியல் கழகம் (ஐஐஎஸ்சி) இடம்பெற்றுள்ளது. கடந்த ஆண்டும் ஐஐஎஸ்சி இதே இடத்தில் இருந்தது. ஆனால் கடந்த முறை 43 ஆவது இடத்திலிருந்த ஐஐடி மும்பை இம்முறை 42 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
மேலும் இம்முறை வேல்டெக் பல்கலைக்கழகம் 43 ஆவது இடத்தைப் பிடித்து, முதல் 100 சிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் இடம்பிடித்த இந்தியாவைச் சேர்ந்த குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த தனியார் பல்கலைக்கழகம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
ஐஐடி தில்லி பட்டியலில் 54 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு 60 ஆவது இடத்தில் இருந்தது.
சென்னை ஐஐடி கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் 62 ஆவது இடத்திலும், ஐஐடி கான்பூர் 63 ஆவது இடத்தையும், ஐஐடி ரூர்கி 70 ஆவது இடத்தையும், ஐஐடி காரக்பூர் 87 ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.
கடந்த ஆண்டு 51 ஆவது இடத்திலிருந்த ஐஐடி காரக்பூர் இம்முறை 87 ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply