டொனால்ட் டிரம்ப் பேச்சு முட்டாள்தனமானது. வடகொரியா தூதர் அதிரடி
வடகொரியாவின் தொடர்ச்சியான அணு ஆயுத சோதனைக்கு அமெரிக்கா மற்றும் ஐ.நா கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் அணு ஆயுதத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன்னுடன் பேச்சுவார்த்தை நடத்துவேன் என அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து ஜெனீவாவில் ஐ.நா. சபைக்கான வடகொரியா தூதர் சோ சி பியாங்கிடம் கேள்வி எழுப்பியபோது, அவர் கூறியதாவது: டொனால்ட் டிரம்ப்பை சந்திப்பதா, வேண்டாமா என்பது குறித்து எங்கள் தலைவர் முடிவு செய்வார். ஆனால் டிரம்பின் எண்ணம் அல்லது பேச்சு முட்டாள்தனமானது என்றே நான் கருதுகிறேன். அவர் பேசி இருப்பது ஜனாதிபதி தேர்தலில் பயன்படுத்திக்கொள்வதற்காகத்தான். வேறொன்றும் இல்லை. இது ஒரு வகையிலான பிரசாரம், விளம்பரம். இது பயன்படாது. இது அர்த்தமற்றது. ஈடுபாடும் இல்லாதது” என்று கூறியுள்ளார்.
வடகொரிய தூதரின் இந்த கருத்தால் டிரம்புக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பேச்சுவார்த்தைக்கு எப்போதுமே வடகொரியா தயாராக இல்லாமல் இருந்த நிலையில் அவரிடம் பேச்சுவார்த்தை குறித்த கருத்தை டொனால்ட் தெரிவித்தது தவறு என்றே பெரும்பாலான அமெரிக்கர்கள் கருதுவதாக கூறப்படுகிறது.