ட்வீட் பதிலுக்கு 140 எழுத்துகள் என்ற கட்டுப்பாட்டை தளர்த்த ட்விட்டர் திட்டம்
ஒருவரின் ட்விட்டர் பதிவுக்கு ரிப்ளை செய்யும்போது இத்தனை வருடங்களாக இருந்த 140 எழுத்துக்குள் பதிவிட வேண்டும் என்ற கட்டுப்பாட்டை உடைத்தெறிய முன்வந்துள்ளது ட்விட்டர் நிறுவனம்.
இனி ஒருவரின் பதிவுக்கு அல்லது ஒரு குழுவின் பதிவுக்கோ பதில் அளிக்கும்போது 140 எழுத்துக்களை மட்டுமே பதிவிட வேண்டும் என்ற அவசியமில்லை. இந்த மாற்றம் குழு உரையாடல்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
ஒரு குறிப்பிட்ட பதிவுக்கு பயனாளிகள் பதிலளிக்கும் போது, பதில் பதிவு அதன் ஒரு பகுதியாக இருக்காமல், மேலே வந்துவிடுமாறும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் ட்விட்டர் நிறுவனம் புகைப்படங்கள், காணொலிகள், மேற்கோள் ட்வீட்டுகள், கருத்துக்கணிப்புகள் மற்றும் அனிமேஷன்கள் ஆகியவை 140 என்ற எழுத்து எல்லைக்குள் சேர்க்கப்படாது என்று அறிவித்திருந்தது. அத்துடன் தற்போது பயனர்களின் பெயர்களும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால் புதிய அறிவிப்பு இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.
போட்டி உலகில் அதிக ட்விட்டர் பயனர்களை உருவாக்குவதற்காக, பதிவு என்றால் 140 எழுத்துக்கள் மட்டுமே என்ற பத்தாண்டு காலக் கோட்பாட்டை உடைத்தெறிந்து, ஃபேஸ்புக் மற்றும் பல சமூக வலைதளங்களைப் போல இயங்க உள்ளதாக ட்விட்டர் வலைதளம் ஏற்கெனவே அறிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.