தகுதிநீக்கம் குறித்து 18 எம்.எல்.ஏக்கள் கூறுவது என்ன?
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சிக்கு அளித்த ஆதரவை வாபஸ்பெறுவது என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர் ஆளுநரைச் சந்தித்து தனித்தனியாகக் கடிதம் கொடுத்தனர். இதற்கு, 19 எம்.எல்.ஏ-க்களிடம் விளக்கம் கேட்டு, சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார். எம்.எல்.ஏ ஜக்கையனைத் தவிர மற்ற எம்.எல்.ஏ-க்கள் நேரில் ஆஜராகவில்லை. இதனால், 18 எம்.எல்.ஏக்கள் இன்று காலை தகுதிநீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது
இந்த நிலையில் தற்போதும் கர்நாடக சொகுசு இல்லத்தில் தங்கியிருக்கும் 18 எம்.எல்.ஏக்கள் இதுகுறித்து கூறியபோது, ‘“நாங்கள் கொடுத்த கடிதத்தின் பேரில், சட்டசபையில் பெருபான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வாய்ப்புள்ளது. தற்போதைய சூழ்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் பெரும்பான்மையை நிரூபிக்க இயலாது. இதனால், தந்திரமாக எங்களில் 18 பேரை தகுதிநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால், பெருபான்மையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிரூபித்துவிடலாம் என்று கருதுகிறார். ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தந்திரத்தை நீதிமன்றம்மூலம் முறியடிப்போம்.
எங்கள் மீது கட்சித் தாவல் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. பெருபான்மையை நிரூபித்துவிட்டால், இன்னும் ஆறுமாதங்களுக்கு சிக்கல் ஏற்படாது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பு கணக்குப் போட்டுள்ளது. எங்களைத் தகுதிநீக்கம் செய்துவிட்டு, நிரந்தரமாக அவர்களால் ஆட்சியைத் தொடர முடியாது. ஏனெனில், மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். எம்.எல்.ஏ-க்களைத் தகுதி நீக்கம் செய்தால், அந்தத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். அவ்வாறு தேர்தல் நடந்தால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர்கள் வெற்றிபெற முடியாது. அது, தி.மு.க-வுக்குத்தான் சாதகமான சூழ்நிலை ஏற்படும். இதனால், மக்களே இந்த ஆட்சியை அகற்றிவிடுவார்கள். ஜெயலலிதா ஏற்படுத்திய இந்த ஆட்சி கவிழக் காரணமாக இருந்தவர்களை ஜெயலலிதாவின் ஆன்மா என்றுமே மன்னிக்காது” என்று கூறினர்.