தக்காளி விலை உயர்வுக்கு காரணம் யார்?

தக்காளி விலை உயர்வுக்கு காரணம் யார்?
tomoto600
வரலாறு காணாத அளவுக்கு தக்காளி விலை அதிகரித்துவிட்டது. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு கிலோ 100 ரூபாய் வரை தக்காளி விலை போவதால் விவசாயிகளும் வியாபாரிகளும் மகிழ்ச்சியடைகின்றனர். ஆனால், ஒட்டுமொத்த தாய்மார்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது தக்காளி விலை உயர்வு.

பல நேரங்களில் கிலோ 5 ரூபாய் என்று கூவிக் கூவி விற்கும்போதெல்லாம் வாங்க ஆளில்லாமல், குவிந்து கிடந்த தக்காளியை, இன்றைக்கு அதியசப் பொருளாகப் பார்க்கும் நிலை உருவாகியிருக்கிறது. கடந்த சில நாட்களாக கிலோ 120 ரூபாய்க்கு உயர்ந்த தக்காளியின் விலை, இன்றைக்கு கிலோ 80 ரூபாய் அளவுக்குக் குறைந்திருக்கிறது.

” இப்படியொரு நிலை ஏற்பட்டதற்கு பொதுத்துறை நிறுவனங்கள்தான் மிக முக்கியக் காரணம். தனியார் விதை நிறுவனங்களின் லாபத்திற்காகத்தான், கோடை ரக தக்காளி விதைகளை சந்தையில் விற்காமல் மறைத்து விடுகின்றனர். அதன் விளைவை பொதுமக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்” என ஆதங்கப்படுகிறார் தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அரச்சலூர் செல்வம்.

அவரே தொடர்ந்து நம்மிடம், ” தனியார் விதை உற்பத்தி நிறுவனங்கள் ஆண்டுதோறும் பல்லாயிரம் கோடிகளுக்கு விதை விற்பனையின் மூலம் லாபம் ஈட்டுகின்றன. தமிழ்நாட்டில் ஒரு கிலோ தக்காளி விதை 40 ஆயிரம் ரூபாயில் இருந்து 60 ஆயிரம் ரூபாய் வரையில் விலை போகின்றன. இதுவே, தானியங்கள் என்றால் அதிக விதைகள் தேவைப்படும். லாபமும் பெரிதாகக் கிடைப்பதில்லை. எனவே, தனியார் விதை நிறுவனங்கள் காய்கறி விதைகளில் கவனம் செலுத்துகின்றன.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் கோடை காலத்தில் விளைவிக்கும் தக்காளி விதைகள் ஏராளமாக உள்ளன. இதற்கு மருதம் என்று பெயர். இதைப்பற்றியெல்லாம் அவர்கள் வெளியில் சொல்வதில்லை. இந்த விதைகளை சந்தையில் விற்பதற்கும் அவர்கள் முன்வருவதில்லை. அப்படிச் செய்தால், தனியார் விதை உற்பத்தியாளர்களுக்கு லாபம் கிடைக்காது என்பதுதான் மிக முக்கியக் காரணம். தனியார்கள் விற்கும் வீரிய விதைகள் என்பவை கோடையைத் தாங்கி வளரும் தன்மை அற்றவை. தவிர, வட மாநிலங்களில் அதிகப்படியான வறட்சி நிலவுவதால் தக்காளி வரத்து குறைந்துவிட்டது. தற்போதைய விலையேற்றத்தால் வியாபாரிகளுக்கு ஐம்பது சதவீத லாபம் கிடைக்கிறது. விவசாயிகளுக்கு நீண்டநாட்களுக்குப் பிறகு ஓரளவு லாபம் கிடைத்துள்ளது.

தக்காளி விலை ஏற்றத்தால் பொதுமக்கள் வெகுவாக பாதிக்கின்றனர். அதுவே, விலை வீழ்ச்சியின்போது விவசாயிகளின் கஷ்டத்தை யாரும் பார்ப்பதில்லை. விலை வீழ்ச்சியடையும்போது, விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படாத வகையில் திட்டம் கொண்டு வருவதைப் பற்றி அரசு பரிசீலிக்க வேண்டும். போர்ச்சுக்கீசியர்கள் காலத்தில்தான் தக்காளி என்பது மிக முக்கிய உணவுப் பொருளாக அறிமுகம் செய்யப்பட்டது. அதற்கு முன்பெல்லாம் புளிப்புச் சுவைக்காக எலுமிச்சை பழங்களைத்தான் நாம் பயன்படுத்திக் கொண்டிருந்தோம். விலையேற்றத்தில் இருந்து தப்பிக்க வேண்டுமானால், தக்காளிப் பயன்பாட்டைக் குறைத்தால் மட்டுமே சாத்தியம்” என்றார் உறுதியோடு.

அதிக நாட்கள் குளிர்பதனப் பெட்டியில் வைக்க முடியாத காய்கறிகளில் ஒன்றாக தக்காளி இருக்கிறது. ‘ கோடை ரக தக்காளி விதைகளை ஆய்வகங்களுக்குள் பூட்டி வைக்காமல், அவற்றை சந்தைப்படுத்த அரசு முயற்சி எடுக்குமா?’ என்ற குரல் இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் எழும்புகிறது.

Leave a Reply