தங்கம் இறக்குமதியில் தவறு யார் பக்கம்?
பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி விவகாரத்தில் எழுந்த நெருப்பு இன்னும் அணைந்தபாடில்லை. இந்தப் பிரச்சினையில் சமீபத்திய முன்னேற்றங்களாக ஆறு மாதங்களுக்குள் சிக்கல்களிலிருந்து மீண்டு வருவோம் என பஞ்சாப் நேஷனல் வங்கியின் நிர்வாக இயக்குநர் சுனில் மேத்தா சொல்லியிருப்பது, நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்ஸியை பிடிக்க தங்களது ஆளுகையின்கீழ் உள்ள ஹாங்காங் உதவும் என சீனா அறிவித்திருப்பது போன்றவை நடந்திருக்கின்றன. நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்ஸி இருவரும் மின்னஞ்சல் வழியான விசாரணைக்குக்கூட ஒத்துழைக்கமுடியாது என்று கூறியிருக்கிற கேலிக்கூத்தான விஷயமும் நடந்திருக்கிறது.
இவற்றுக்கு இடையில் ஒரு பழைய சம்பவத்தை சமீபத்தில் தூசு தட்டி வெளியே எடுத்திருக்கிறது பாரதிய ஜனதா கட்சி. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் இறுதி காலத்தில் 20:80 தங்க இறக்குமதித் திட்டத்தில் கொண்டுவரப்பட்ட மாற்றத்தின் மூலம் பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் சம்பந்தப்பட்டுள்ள மெகுல் சோக்ஸிக்கு காங்கிரஸ் உதவியதாக குற்றம் சாட்டியிருக்கிறார் மத்திய தகவல் தொடர்பு மற்றும் சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத். இந்த விவகாரம் தொடர்பாக ரிசர்வ் வங்கியின் மேலாளர் அளவிலான பதவிகளில் உள்ள நான்கு அதிகாரிகள் மத்திய குற்றப் புலனாய்வு அமைப்பால் விசாரிக்கப்பட்டுள்ளார்கள். ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை கவர்னர் ஹெச். ஆர். கானும் சிபிஐ விசாரணை வளையத்துக்குள் வந்திருக்கிறார். அப்போது நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரமும் விரைவில் விசாரிக்கப்படலாம் என தகவல்கள் வெளிவந்துள்ளன.
பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் தங்களுக்கு ஏற்பட்டுள்ள களங்கத்தை கொஞ்சம் காங்கிரஸூக்கும் பகிர்ந்து அளிப்பதில் பாரதிய ஜனதாவுக்கு மகிழ்ச்சி ஏற்படாமல் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் 20:80 தங்க இறக்குமதித் திட்டத்தைப் பற்றி ஆகஸ்டு 13, 2014 அன்று நாடாளுமன்றத்தில் பேசிய அப்போதைய வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தத் திட்டத்தைப் பாராட்டிப் பேசியது ஏன் என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. அதேபோல ஆகஸ்டு 21, 2014-ல் நிதித்துறைச் செயலராக இருந்த அர்விந்த் மாயாராமும் இந்தத் திட்டம் சரியானது எனக் கூறியுள்ளதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங் சர்ஜ்வாலா கூறியிருக்கிறார். இரண்டு தேசியக் கட்சிகளும் வழக்கம்போல ஒருவரை ஒருவர் குறை சொல்லிக் கொண்டிருந்தாலும் இந்தத் திட்டத்தைக் கொண்டுவரவேண்டிய கட்டாய தேவை அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு இருந்ததை மறுக்க முடியாது.
ஒரு நாடு இன்னொரு நாட்டிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்வதற்கு இருவருக்கும் பொதுவான நாணயமான அமெரிக்க டாலர் தேவைப்படுகிறது. எனவே தேவைப்படும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயை இதற்காக செலவழிக்கவேண்டி இருக்கிறது. ஒரு நாடு உற்பத்தி செய்யும் பொருட்களை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும்பொழுதுதான் இறக்குமதியில் செலவழித்த இந்தத் தொகையை ஈடுகட்ட முடியும்.
இந்தியாவில் தங்கத்துக்கு மக்களிடம் உள்ள அதீதமான வரவேற்பினால், இருப்பில் உள்ள தங்கத்தைப் பயன்படுத்திய பிறகும் மேற்கொண்டு இறக்குமதி செய்யவேண்டிய நிலை ஏற்படுகிறது. இறக்குமதியில் செலவழித்த தொகையை ஏற்றுமதியில் ஈடுகட்ட முடியாத நிலையில் நாட்டின் நடப்புக் கணக்கில் பற்றாக்குறை ஏற்படுகிறது. இந்த நிலையில் மேலும் இறக்குமதி செய்வதற்கும், நடப்புக் கணக்கு பற்றாக்குறையை சரிசெய்வதற்கும், பொது நாணயமான அமெரிக்க டாலர் அதிகளவில் தேவைப்படுகிறது. டாலரின் தேவை அதிகரிப்பதைத் தொடர்ந்து டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைகிறது. இந்தப் பற்றாக்குறை நீண்டகாலத்துக்கு நீடிக்கும் பட்சத்தில் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது.
2012- 2013 காலகட்டத்தில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 8,800 கோடி டாலராக இருந்தது. பொருளாதார சிக்கல்கள் உருவாகும் வாய்ப்புள்ளதால் முதலீடுகள் நாட்டை விட்டு வெளியேறும் சூழல் ஏற்பட்டது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதுவரை இல்லாத அளவில் 68.85 ஆக சரிந்தது. எனவே தங்கம் அதிக அளவு இறக்குமதி செய்வதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக 2013-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அப்போதைய அரசு 20:80 என்ற தங்க இறக்குமதி திட்டத்தைக் கொண்டுவந்தது. இந்தத் திட்டத்தின்படி தங்கத்தை இறக்குமதி செய்யும் உரிமை பெற்றிருந்த எம்எம்டிசி மற்றும் எஸ்டிசி போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் தாங்கள் இறக்குமதி செய்யும் தங்கத்தில் 80 சதவீதத்தை கட்டாயம் உள்ளூர் தேவைகளுக்கு பயன்படுத்தவேண்டும், 20 சதவீதத்தை கட்டாயம் ஏற்றுமதி செய்யவேண்டும். 20 சதவீதத்தை ஏற்றுமதி செய்தால் மட்டுமே அடுத்த முறை இறக்குமதி செய்ய இயலும் என அறிவிக்கப்பட்டது. ஆகஸ்டு 2013-ல் தங்கம் மற்றும் வெள்ளி சார்ந்த பொருட்களை இறக்குமதி செய்வதற்கான வரியையும் 10 சதவீதமாக அரசு உயர்த்தியது.
இந்தத் திட்டத்தின் மூலம் எதிர்பார்த்த அளவு நடப்புக் கணக்குப் பற்றாக்குறை குறைந்ததா என்றால், ஆம், கண்டிப்பாக குறைந்தது. இந்தத் திட்டம் அறிவிக்கப்படுவதற்கு முன்பு 4.8 சதவீதமாக இருந்த பற்றாக்குறை இந்தத் திட்டத்துக்குப் பின்பான 2013-2014 காலஅளவில் 1.7 சதவீதம்வரைக் குறைந்தது. ஆனால் இறக்குமதி குறைந்ததால் தங்கத்துக்கான தட்டுப்பாடு அதிகரித்தது.
எனவே தங்கத்தின் தட்டுப்பாட்டை சரிசெய்வதற்காக பொதுத்தேர்தல் முடிவுகள் வெளியாக மூன்று நாட்களே இருக்கும் நிலையில் மே 13, 2014 அன்று 20:80 தங்க இறக்குமதித் திட்டத்தில் அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மாற்றங்களைக் கொண்டுவந்தார். இந்த மாற்றங்களின்படி தங்கம் இறக்குமதி செய்வதற்கான உரிமை பொதுத்துறை நிறுவனங்களோடு சில தனியார் நிறுவனங்களுக்கும் அளிக்கப்பட்டது. 20:80 திட்டத்தை தனியாருக்கு திறந்துவிட்டதன் மூலம் 13 தனியார் வர்த்தக நிறுவனங்கள் உள்ளூர் சந்தையில் ரூ.4,500 கோடி அளவுக்கு பலனடைந்து இருப்பதாக பாரதிய ஜனதா அரசாங்கம் குற்றம் சாட்டுகிறது. 20 சதவீதம் ஏற்றுமதி செய்யவேண்டிய தங்கத்தை வளையல்கள் மற்றும் செயின்களாக மாற்றியபிறகு வெளிநாடுகளுக்கு அவற்றை அனுப்பி திரும்ப அவற்றையே தங்கக் கட்டிகளாக நிறுவனங்கள் பெற்றுக்கொண்டதாகவும் அரசுத் தரப்பு தெரிவிக்கிறது. இறக்குமதி கட்டுப்பாடுகள் மூலம் கள்ளச் சந்தையில் தங்கம் அதிகம் புழங்கியதாகவும் சிஏஜி அறிக்கையை ஆதாரமாகக் கொண்டு அரசு குற்றம் சாட்டுகிறது. இதனைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்களுக்குப் பிறகு இந்தத் திட்டத்தை 2014-ம் ஆண்டு நவம்பர் 28 அன்று ரத்து செய்தது தற்போதைய பாரதிய ஜனதா அரசாங்கம்.
நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை சரிசெய்வதற்காக கொண்டுவரப்பட்ட இந்தத் திட்டத்தைப் பற்றி பாரதிய ஜனதா அரசாங்கம் இப்போது மீண்டும் பேச ஆரம்பித்திருப்பது பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியை வேறு களத்துக்கு திசை திருப்பும் ஒரு செயலாகவே பார்க்கலாம். பாரதிய ஜனதா அரசாங்கம் கட்டுப்பாடுகளை தளர்த்தியதற்குப் பிறகும் நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்ஸியின் சொத்து மதிப்பு 200 சதவீதம் அளவுக்கு அதிகரித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இந்தப் பிரச்சினையில் காங்கிரஸை மட்டும் குற்றம் சாட்டிவிட்டு பாரதிய ஜனதா தப்பித்துவிட முடியாது.
அதேவேளையில் தங்கத்தை இறக்குமதி செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்கள் குறித்து காங்கிரஸ் அரசாங்கம் போதிய கவனம் செலுத்தவில்லை என்பதை மறுக்கமுடியாது. பிப்ரவரி 29, 2014 அன்று சட்டத்துக்கு புறம்பாக தங்கம் வைத்திருந்ததாக ரித்தி சித்தி புல்லியன் லிமிடெட், குந்தன் ரைஸ் மில் லிமிடெட் போன்றவற்றின் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிறுவனங்களை 20:80 திட்டத்தில் தங்கம் இறக்குமதி செய்ய அரசு அனுமதித்தது. முன்னரே வரிக் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ், கனக் எக்ஸ்போர்ட்ஸ் மற்றும் இப்போது பஞ்சாப் நேஷனல் மோசடியில் சம்பந்தப்பட்டுள்ள கீதாஞ்சலி ஜெம்ஸ் போன்றவையும் அனுமதிக்கப்பட்ட நிறுவனங்களில் சில. இவை எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டன என்பது முக்கியமான கேள்வி. இருப்பினும் இது குறித்த விசாரணைகளை பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியோடு மட்டும் முழுக்க முழுக்க தொடர்புபடுத்துவது சரியாக இருக்குமா என்பதும் விவாதத்துக்குரியதே.
இத்தனை சிக்கல்களுக்கும், கள்ளக் கடத்தலுக்கும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவதற்கும் முதன்மையான காரணங்களில் ஒன்று இந்தியர்களுக்கு தங்கத்தின் மீதுள்ள வெறி. கச்சா எண்ணெய்க்குப் பிறகு இந்தியாவில் அதிகம் இறக்குமதி செய்யப்படுவது தங்கம். உலக அளவில் தங்க இறக்குமதியில் இந்தியா பெற்றுள்ள இடம் ஐந்து. வீடுகளில் தங்கத்தை சேர்த்துவைப்பதில் உலக அளவில் இந்தியர்கள் பிடித்துள்ள இடம் ஒன்று. கச்சா எண்ணெய் என்பது ஒரு அத்தியாவசியமான பொருள். ஆனால் தங்கம் அப்படிப்பட்டதல்ல. தங்கத்தை வாங்கி, வங்கி லாக்கரில் பூட்டி வைப்பதால் பெரிய பயனேதும் இல்லை என்பதே பொருளாதார நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. ஆண்டுகளுக்குப் பிறகு அது சிறிதளவு லாபம் கொடுக்குமென்றாலும் இந்தியப் பொருளாதாரத்தை மோசமாக சிதைக்கும். தங்கத்தின் மீதான வெறி குறையும்பொழுதுதான் இந்த சிக்கல்களுக்கு ஓரளவாவது முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்பதே மறுக்கமுடியாத உண்மை.