தங்கம் விலை திடீர் உயர்வு! காரணம் என்ன?
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கத்துடன் இருந்த நிலையில் நேற்று திடீரென சவரன் ஒன்றுக்கு ரூ.320 உயர்ந்துள்ளது. இதனால் நகை வாங்கும் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கடந்த 10-ம் தேதி, ஒரு பவுன் தங்கம் விலை ரூ.23 ஆயிரத்தைத் தொட்டது. ஒரு கிராம் விலை ரூ.2,895 ஆக இருந்தது. ஒரு பவுன் விலை ரூ.23,160 என்று விற்பனை ஆனது. அதன் பின்னர், தங்கத்தின் விலை சற்று ஏற்ற இறக்கத்துடன் இருந்தது. இந்நிலையில், நேற்று காலை 23 ஆயிரம் ரூபாயைத் தாண்டியது. இது, முந்தைய நாள் விலையைக் காட்டிலும் பவுனுக்கு ரூ.320 உயர்ந்தது.
இந்த விலையேற்றம் குறித்து தி.நகர் நகை வியாபாரி ஒருவர் கூறியபோது, ‘ஆயுத பூஜை, தீபாவளி, கிறிஸ்துமஸ், பொங்கல் என வரிசையாக பண்டிகைகள் வருகின்றன. இந்த நேரத்தில் தங்கத்தின் மீதான முதலீடு இயற்கையாகவே அதிகமாக இருக்கும். அதே நேரத்தில், தங்கம் வாங்குவோரின் எண்ணிக்கையும் இந்த சீசனில் அதிகரிக்கும். எனவே, தங்கம் விலை இனி ஏறுமுகமாகத்தான் இருக்கும். மேலும், உலகச் சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு சற்று வீழ்ச்சி அடைந்துள்ளதும் தங்கத்தின் விலை ஏற்றத்துக்கு முக்கியக் காரணம். மேலும், வடகொரியா-அமெரிக்கா மோதலும் தங்கம் விலை உயர்வுக்கு ஒரு காரணமாகும்” என்று கூறினார்.