தண்ணீர் அதிகம் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவது எப்படி?
காலையில் எழுந்ததும் இரண்டு டம்ளர் தண்ணீர் குடிக்கலாம். அது சிறுநீரகத்துக்கு மிகவும் நல்லது. வயிறு முட்ட இரண்டு, மூன்று சொம்பு தண்ணீர் எல்லாம் குடிக்கவேண்டிய அவசியம் இல்லை.
சாப்பிடுவதற்கு முன்னர் தண்ணீர் குடிக்கக் கூடாது. சாப்பிடும்போது தேவைப்பட்டால் சிறிது அருந்தலாம். சாப்பிட்ட பிறகு கொஞ்சமாகத் தண்ணீர் குடிக்கலாம்.
இரண்டு அல்லது மூன்று மணி நேரம் கழித்து நிறையத் தண்ணீர் குடிக்க வேண்டும். அதைத் தண்ணீராகத்தான் அருந்த வேண்டும் என்பது இல்லை. ஜூஸ் மற்றும் ஆரோக்கியமான பானங்களாகவும் அருந்தலாம்.
குழந்தைகளுக்கு ஆறு மாதம் வரைக்கும் தாய்ப்பால்தான் கொடுக்க வேண்டும். ஒரு வயது நிரம்பிய பின்னர், தினமும் 1 லிட்டர் வரை குழந்தைகள் தண்ணீரை அருந்தலாம்.
– பாலுசத்யா
தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த…
1 சாப்பிடும்போது அல்லது சாப்பிட்டு முடித்ததும் ஒரு டம்ளர் தண்ணீர் அருந்துங்கள்.
2 எங்கே சென்றாலும் கையில் ஒரு வாட்டர் பாட்டிலை எடுத்துச்செல்லுங்கள். அது ஸ்டீல், தாமிர பாட்டிலாக இருப்பது நல்லது. பிளாஸ்டிக் பாட்டிலைத் தவிர்க்க வேண்டும்.
3 வேலைசெய்யும் இடத்தில், உங்கள் மேசைக்கு மேல் வாட்டர் பாட்டிலை வைத்திருக்க வேண்டும்.
4 நொறுக்குத்தீனி சாப்பிட வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டால், முதலில் தண்ணீர் அருந்துங்கள்.
5 குளிர்பானம், ஃபிரெஷ் ஜூஸ், காபி, டீ-க்கு பதில் தண்ணீர் அருந்தும் பழக்கத்தைக் கடைப்பிடியுங்கள்.
6 தினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறோம் என குறித்துவைத்தாலே போதுமான அளவுக்குத் தண்ணீர் அருந்தும் பழக்கம் தானாக வந்துவிடும்.
கோடைகாலத்தில், நாம் நிறையச் சாப்பிட மாட்டோம்; திரவங்களைத்தான் அதிகம் உட்கொள்வோம். தண்ணீர், ஜூஸ், மோர், இளநீர், சோடா குடிப்போம். இந்த நீர் வடிவில் எடுக்கும் அளவு ஒவ்வொருவரின் உடல்நிலையைப் பொறுத்து 2,000 மி.லி-யில் இருந்து 5,000 மி.லி வரை இருக்கும்.
வெயில் காலத்தில், ஒவ்வொருவரும் அவரவர் உடல்நிலைக்கு ஏற்ப 3,300 மி.லி-யில் இருந்து 7,200 மி.லி வரை தண்ணீர் அருந்த வேண்டும். வயலில் வேலை செய்பவர்கள், சாலைப் பணியாளர்கள் என வெயிலில் உழைப்பவர்கள் சாதாரண தினங்களிலேயே நிறையத் தண்ணீர் குடிக்க வேண்டும்.
செரிமானத்துக்கு, ஊட்டச்சத்தை கிரகிப்பதற்கு, சீரான ரத்த ஓட்டத்துக்கு, எச்சில் உள்ளிட்ட செரிமான திரவங்கள் சுரப்பதற்கு, ஊட்டச்சத்துக்களை உடல் முழுவதும் கொண்டு செல்வதற்கு, உடலின் தட்பவெப்பநிலையை பராமரிப்பதற்கு என எல்லாவற்றுக்கும் காரணமாக தண்ணீர் இருக்கிறது.
பிட்யூட்டரி சுரப்பியில் இருந்துவரும் சிக்னல், `சிறுநீரகத்தைத் தூண்டி உடலில் அதிக அளவு தண்ணீர் உள்ளது. அதை வெளியேற்று’ என சொல்லும். தண்ணீர் குறைவாக இருந்தால், `போதுமான அளவு தண்ணீர் இல்லை. எனவே, வெளியேற்றுவதை நிறுத்து’ என உத்தரவிடும். உடனே, மூளையில் இருந்து தாகமாக இருப்பதற்கான சிக்னல் வெளிப்படும். உடனே, தண்ணீரோ, பழச்சாறோ அருந்த வேண்டும் என்ற உணர்வு ஏற்படும்.