தமிழகத்திற்கு அனைத்து உதவிகளையும் செய்ய தயார்: ராஜ்நாத் சிங்
கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் உருவான கஜா புயல் இன்று அதிகாலை நாகை மற்றும் வேதாரண்யம் ஆகிய பகுதிகள் இடையே கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 100 முதல் 110 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதனால், நாகை, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. புயல் மற்றும் கன மழையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் புயல் பாதிப்பு நிலவரங்கள் குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முதல்வர் பழனிசாமியிடம் தொலைபேசி மூலம் கேட்டறிந்தார். அப்போது புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்துக்கு தேவையான உதவிகளை செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாகவும், புயல் பாதிப்புகளை கண்காணித்து உதவ உள்துறை செயலருக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் ராஜ்நாத் சிங் உறுதியளித்துள்ளார்.