தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை எவ்வளவு குறைந்தது தெரியுமா?
பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் வரலாறு காணாத வகையில் உயர்ந்து வந்த நிலையில், இது தொடர்பாக பிரதமர் மோடி, அமைச்சர்கள் அருண் ஜெட்லி, தர்மேந்திர பிரதான் மற்றும் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது பெட்ரோல் டீசல் விலையை குறைக்க முடிவு செய்யப்பட்டது.
ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அருண் ஜெட்லி, பெட்ரோல், டீசல் விலையில் மத்திய அரசு விதிக்கும் கலால் வரி ரூ.1.50 குறைக்கப்படும் எனவும், எண்ணெய் நிறுவனங்கள் தங்கள் பங்குக்கு ரூ.1 குறைக்கும் எனவும் அறிவித்தார். மொத்தம் லிட்டருக்கு ரூ.2.50 குறைக்கப்பட்ட நிலையில், மாநில அரசுகளும் ரூ.2.50 குறைக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். மேலும் கலால் வரி குறைப்பின் மூலம் மத்திய அரசுக்கு இந்த நிதியாண்டு 10500 கோடி ரூபாய் வரி இழப்பு ஏற்படும் என்றும் கூறியிருந்தார்.
இந்த வரி குறைப்பு இன்று காலை முதல் நடைமுறைக்கு வந்தது. சென்னையில் நேற்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.87.33-க்கும், டீசல் விலை லிட்டர்க்கு ரூ.79.79-க்கும் விற்பனையானது. இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.63 குறைந்தது. ஒரு லிட்டர் ரூ.84.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் ரூ.79.79 -க்கு விற்பனை செய்யப்பட்ட டீசல் இன்று ரூ.77.11-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதற்கிடையே மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று பாஜக ஆளும் மாநிலங்களில் மாநில அரசுகள் பெட்ரோல் டீசல் விலை குறைந்துள்ளது என்பது தெரிந்ததே