தமிழகத்தில் 932 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன: தேர்தல் அதிகாரி
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில் 932 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டதாக, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு நடந்த வாகன சோதனையில் ரூ. 50.70 கோடி பணம், 223 கிலோ தங்கம், 356 கிலோ வெள்ளி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றார்.
தமிழகத்தில் 18 தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத் தேர்தலில் 305 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதாகவும், 213 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதேபோல், தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கு தாக்கல் செய்யப்பட்ட 1587 வேட்பு மனுக்களில் 655 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், 932 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதிகபட்சமாக கரூர் மக்களவைத் தொகுதியில் 43 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதாகவும், தென் சென்னையில் 42 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதாகவும் சத்ய பிரதா சாஹூ கூறினார்.
இதுவரை தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக 44 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்