தமிழக அரசை எச்சரிக்கிறேன்: நெல்லை கண்ணன் கைது குறித்து சீமான்
பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கைக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
‘பா.ஜ.க அரசின் அரசப்பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக அறச்சீற்றத்தை வெளிப்படுத்திய நெல்லை கண்ணனைக் கைது செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அடக்குமுறையும், ஒடுக்குமுறையும் ஒருசேர கட்டவிழ்த்துவிடப்பட்டு மக்கள் துயருற்று நிற்கும்போது அம்மக்கள் பக்கம் நின்று அவர்களின் உரிமைக்காகக் குரலெழுப்புவதே அறம். அந்நெறிப்படி நின்று போராடிய நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. மக்களின் எண்ணவோட்டத்தைப் பிரதிபலித்த அவரின் பேச்சை வன்முறையைத் தூண்டுவதாக உள்நோக்கம் கற்பிப்பது மடமைத்தனமானது.
சமீபகாலமாக நெல்லை கண்ணனின் பா.ஜ.க கொள்கைக்கு எதிரான வலுவான வாதங்களும் பரப்புரைகளும் தான் இந்தக் கைதுக்குக் காரணம். மேடை பேச்சுகளுக்குக் கைதென்றால் பா.ஜ.கவின் எந்தத் தலைவரும் வெளியில் இருக்கத் தகுதியற்றவர்கள். மாணவர்களை நோக்கி குண்டுகள் வருமென்றும், உயர் நீதிமன்றத்தை இழித்துரைத்த எச்.ராஜா, ஊடகவியலாளர்களைக் கொச்சைப்படுத்திய எஸ்.வி.சேகர், முதல்வரையும், துணை முதல்வரையும் ‘ ஆண்மையற்றவர்கள் ‘ என விமர்சித்த குருமூர்த்தி, வருணாசிரமத்தை ஆதரித்துச் சாதிவெறியோடு பேசிய வெங்கடகிருஷ்ணன், சிதம்பரம் நடராஜர் கோயிலில் பக்தரைத் தாக்கிய தீட்சிதர் தர்ஷன் இவர்களையெல்லாம் கைது செய்யத் துணிவற்ற தமிழக அரசு, தமிழுக்காகவே வாழ்வினை அர்ப்பணித்த நெல்லைக் கண்ணனைக் கைது செய்திருப்பது மிகப்பெரும் அநீதி!
தமிழுக்குத் தொண்டாற்றுவதையே தனது அருந்தவப் பயனென வாழ்ந்து வரும் நெல்லை கண்ணனை சிறைப்படுத்துவது தமிழுக்கும், தமிழருக்கும் நேர்ந்த பெருத்த அவமானம். எனவே, அவர் மீது புனையப்பட்ட வழக்குகளை ரத்துச் செய்து உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன். இல்லாவிடில், தமிழ்ப்பெருந்தொண்டாற்றிய நெல்லை கண்ணனை சிலர் திருப்திக்காக உடல் நலம் குன்றியிருக்கும் பொழுது சிறைப்படுத்தியதற்குத் தமிழர்களின் கடும் வன்மத்தையும், வரலாற்றுப் பெரும் பழியைச் சுமக்க நேரிடும் எனத் தமிழக அரசை எச்சரிக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.