தமிழ்ப் பல்கலை. முறைசார் கல்வியில் யோகா படிப்பு அறிமுகம்

தமிழ்ப் பல்கலை. முறைசார் கல்வியில் யோகா படிப்பு அறிமுகம்

தமிழ்ப் பல்கலைக்கழக முறைசார் கல்வியில் யோகா முதுநிலைப் பட்டப்படிப்பு, வரும் கல்வியாண்டில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக, துணைவேந்தர் க. பாஸ்கரன் தெரிவித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் புதன்கிழமை அவர் கூறியது:
தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களிலேயே தமிழ்ப் பல்கலைக்கழகத்தில்தான் யோகாசனம் ஒரு பாடமாகக் கொண்டு வரப்பட்டது. மேலும், யோகா மையம் தொடங்கப்பட்டு, அதன் மூலம் தொலைநிலைக் கல்வியில் யோகா பட்டயப் படிப்பு, முதுகலைப் பட்டப்படிப்பு நடத்தப்படுகிறது.
இதற்கான பாடத்திட்டங்கள் தமிழ்ப் பல்கலைக்கழகத்திலேயே வடிவமைக்கப்பட்டன. இதைப் பின்பற்றியே, மற்ற பல்கலைக்கழகங்களும் பாடத்திட்டங்களை உருவாக்கியுள்ளன.
இந்நிலையில், இப்பல்கலைக்கழகத்தில் முறைசார் கல்வியில் (ரெகுலர்) வருகிற கல்வியாண்டில் யோகா முதுநிலைப் பட்டப்படிப்பு அறிமுகம் செய்யப்படவுள்ளது.
யோகா மாநாடு நாளை தொடக்கம்: இதை முன்னிட்டு, இப்பல்கலைக்கழகத்தில் யோகா – உலக மாநாடு வெள்ளி (மார்ச் 10) மற்றும் சனிக்கிழமைகளில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டை, திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தொடக்கி வைக்கிறார். மேலும், தருமபுர இளைய ஆதீனம் மாசிலாமணி ஞானசம்பந்தர் சுவாமிகள் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர். சனிக்கிழமை நடைபெறவுள்ள யோகா அமைப்புகளுக்கும், பயிற்றுநர்களுக்குமான பாராட்டு விழாவில் இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ். ராமச்சந்திரன், வேளாண் துறை அமைச்சர் இரா. துரைக்கண்ணு உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
இந்த மாநாட்டின் மூலம், இப்பல்கலைக்கழகத்தில் மீண்டும் யோகா மையம் தொடங்கப்படவுள்ளது. மேலும், யோகாவுக்கென தனிப்பட்ட அமைப்பாக இல்லாமல் பொதுவான அமைப்பாக உருவாக்கி, தமிழ்க் கலை என்ற அடிப்படையில் யோகாவுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவுள்ளது என்றார் துணைவேந்தர்.
பேட்டியின்போது, பதிவாளர் ச. முத்துக்குமார் உடனிருந்தார்.

Leave a Reply