தமிழ்ப் பேராசிரியர் மா.நன்னன் காலமானார்
தமிழறிஞர், தமிழ்ப்பேராசிரியர், சுதந்திர போராட்ட வீரர் மா.நன்னன் இன்று சென்னையில் அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 94
கடலூர் மாவட்டம் சாத்துக்குடலில் பிறந்த நன்னன், தமிழ்க் கட்டுரை, பாட நூல்கள் உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். தொலைக்காட்சியில் பல்வேறு தமிழ் தொடர்பான நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார்.
பெரியார் விருது, தமிழ்ச் செம்மல் விருது, திரு.வி.க. விருது ஆகிய விருதுகளைப் பெற்றவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டம் பெற்ற நன்னன், எழுத்து அறிவித்தலில் ‘நன்னன் முறை’ என்ற புதிய முறையை உருவாக்கியவர். வெள்ளையேன வெளியேறு, இந்தி எதிர்ப்பு உள்ளிட்ட போராட்டங்களில் பங்கேற்றுள்ளார். நன்னனின் இவரது இயற்பெயர் திருஞானசம்பந்தன் ஆகும்.
பேராசிரியர் நன்னன் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், “பேராசிரியர் மா.நன்னன் இழப்பு ஈடு செய்யப்பட வேண்டிய இழப்பு. அவரது இழப்பை 100 பேராசிரியர்கள் சேர்ந்து நிரப்ப வேண்டும். பல்கலைக்கழகமாக இருந்து நாட்டுக்கு தமிழ் அறிவித்தவர் பேராசிரியர் நன்னன். பக்தி இலக்கியங்களை படித்த பிறகும் பகுத்தறிவு பாசறையில் நின்றவர் மா.நன்னன்” என்று கூறியுள்ளார்.