தமிழ் இலக்கியம் படித்தவரா நீங்கள்? இதோ உங்களுக்கு ஒரு அருமையான வேலைவாய்ப்பு
தமிழ் இலக்கியம் படித்தவர்களுக்கு அனைத்துத் துறைகளிலும் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் தெரிவித்தார்.
தமிழ்நாடு பொன்விழா ஆண்டை முன்னிட்டு தமிழ் வளர்ச்சித்துறையும் நான்காம் தமிழ்ச்சங்கமும் இணைந்து மதுரை மாவட்டத்தில் நடத்திய கவிதை, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா மதுரை செந்தமிழ்க் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் பேசியதாவது:
ஐக்கிய நாடுகளில் சார்பில் சமீபத்தில் மொழிகள் பற்றிய ஆய்வுகள் நடத்தப்பட்டன. அதில் உலகில் உள்ள 6,500 மொழிகளில் அடுத்த மூன்றாண்டுகளுக்குள் 3,000 மொழிகள் அழிந்துவிடும் எனத் தெரியவந்துள்ளது. காலனி மற்றும் வணிக ஆதிக்கத்தின் மூலம் ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகள் பல்வேறு நாடுகளுக்குப் பரவின. ஆய்வில் இந்த இரு மொழிகளும் முதல் இரு இடங்களைப் பிடித்துள்ளன.
தமிழ் மொழி 14ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் தமிழ் மொழியை 10ஆம் இடத்துக்கு முன்னேற வைக்கும் முயற்சிகளில் தமிழக அரசு தற்போது ஈடுபட்டுள்ளது.
உலகத் தமிழ்ச்சங்கத்தின் கீழ் தமிழ் அமைப்புகளை ஒருங்கிணைக்கும் பணிகளில் தற்போது ஈடுபட்டு வருகிறோம். முதற்கட்டமாக 50 அமைப்புகளை ஒருங்கிணைக்க உள்ளோம்.
இதில் வெளிநாடுகளில் இருந்து 20 அமைப்புகளும், இந்தியாவின் பிற பகுதிகள் மற்றும் தமிழகத்தில் இருந்து 30 அமைப்புகள் இணைக்கப்படும். இதன் மூலம் தமிழ் மொழி வளர்ச்சி குறித்து பல்வேறு ஆய்வுகள் நடத்தப்படும். தமிழ் படித்தால் வேலை கிடைக்காது என்று மக்களிடையே நிலவும் தவறான சிந்தனையை மாற்றி, தமிழ் இலக்கியம் படித்தவர்களுக்கு அனைத்துத் துறைகளிலும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்றார்.
இதைத் தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன், தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குநர் க.பசும்பொன், நான்காம் தமிழ்ச்சங்கத் தலைவர் குமரன் சேதுபதி, செயலர் ச.மாரியப்ப முரளி, செந்தமிழ்க் கல்லூரிச் செயலர் ந.லட்சுமி குமரன்சேதுபதி, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ம.திருமலை, செந்தமிழ்க் கலைக் கல்லூரி முதல்வர் கி.வேணுகா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.