6 மாதத்துக்குப் பின்னர் ஓபிஎஸ்-ம் ஈபிஎஸ் ஆகிய இருவரும் எந்த திசைக்கு போனாலும் தண்டிக்கப்படுவது உறுதி என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
எடப்பாடி பழனிசாமிக்கோ, பன்னீர்செல்வத்துக்கோ ஜெயலலிதா மீது உண்மையான பற்று இருக்குமானால் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்தை உடைத்து சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வாங்கித் தந்திருக்க வேண்டும்.
ஜெயலலிதா இல்லை என்றால் எடப்பாடி பழனிசாமியும், பன்னீர்செல்வமும் இந்த நிலைமைக்கு வந்திருக்க முடியாது. இவ்வளவு பணம் சம்பாதித்திருக்க முடியாது. அந்த நன்றி உணர்ச்சி அவர்களுக்கு கொஞ்சமும் கிடையாது.
தாங்கள் பதவிக்கு வரக் காரணமாக இருந்த, தாங்கள் பணம் சம்பாதிக்கக் காரணமாக இருந்த ஜெயலலிதாவுக்கே நன்றியில்லாதவர்களாக எடப்பாடி பழனிசாமியும் பன்னீர்செல்வமும் இருக்கிறார்கள் என்றால் அவர்கள் எப்படி தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி உள்ளவர்களாக இருப்பார்கள்.
இவர்களுக்கு மக்களைப் பற்றிய எந்தக் கவலையும் கிடையாது. ஆறுமாத காலம் கொள்ளைகள் தொடருவதற்காகத்தான் பழனிசாமியும் பன்னீர்செல்வமும் ஒன்றாக இருப்பதைப் போல நடிக்கிறார்கள். பதவி போனதும் இருவரும் ஆளுக்கொரு திசையில் போய்விடுவார்கள். அவர்கள் எந்தத் திசைக்கு போனாலும், எங்கே தலைமறைவு ஆனாலும் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மமாக இருந்தாலும், கொடநாடு கொலை கொள்ளை விவகாரமாக இருந்தாலும், லஞ்ச லாவண்ய வழக்குகளாக இருந்தாலும் – அவை சட்டபூர்வமாக நடத்தப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என்பதை நாட்டு மக்களுக்கு அளிக்கும் உறுதிமொழியாக தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.