தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வரும் பாவத்தை போக்க என்ன செய்ய வேண்டும்?
சிவபெருமானை வழிபடுபவர்களுக்கு சிவலிங்கம் எவ்வளவு சிறப்பு வாய்ந்ததோ, அதேப் போலவே சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றிய ருத்ராட்சமும் அத்தகைய சிறப்பு வாய்ந்தது. அந்த ருத்ராட்சத்தை அணிவது பற்றியும், அதன் பயன் பற்றியும் ஸ்ரீமத் தேவி பாகவதம், சிவ மகா புராணம், பழமையான சிவாகமங்களில் கூறப்பட்டுள்ள சிலவற்றை இங்கே பார்ப்போம்.
எந்த யாகத்தையும் செய்யாதவனும், எந்த மந்திரத்தையும் உச்சரிக்காதவனும் கூட, ருத்ராட்சத்தை தொடுவதன் மூலமாகவே அனைத்து பாவங்களில் இருந்து விடுபட இயலும்.
ருத்ராட்சம் அணிந்த ஒருவன் பல புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய பலனைவிட அதிக பலனைப் பெறுகிறான்.
ருத்ராட்சத்தை அணிந்தவனும், அதை வைத்து வழிபாடு செய்கிறவனும் சம்சார பந்தங்களில் இருந்து விடுபட்டு, இனியும் தொடர இருக்கும் பலகோடி பிறப்புகளில் இருந்து விடுபடுவான்.
ஒருவர் நம்பிக்கையோடு ருத்ராட்சம் அணிந்தாலும் கூட, அல்லது நம்பிக்கை இல்லாமல் அணிந்து கொண்டாலும் சரி.. அவன் ருத்ரனின் அம்சத்தை பெற்ற வனாக மாறுகிறான்.
ருத்ராட்சம் அணிந்தவருக்கு உணவு, உடை வழங்குவது, ருத்ராட்சம் அணிந்த சிவனடியாருக்கு நீர் ஊற்றி பாத பூஜை செய்வதன் மூலமாக ஒருவன் சிவலோகத்தை அடைவான். ருத்ராட்ச மாலை அணிந்த ஒருவருக்கு உணவளித்தால், அவரின் 21 தலைமுறை மக்களும் பாவங்களில் இருந்து விடுபட்டு ருத்ர லோகத்தை அடைவார்கள்.
அனைத்து வித தெய்வ சுலோகங்கள், விரதங்களை அனுசரிப்பதன் மூலம் ஒருவன் அடைகின்ற பலனை, ருத்ராட்சம் அணிந்து கொள்வதன் மூலம் சுலபமாக பெற்றிட முடியும்.
ருத்ராட்ச மாலையை ஒருவன் வெறுமனே கையில் வைத்திருந்தால் கூட, அவன் நாக்கு வேதங்களையும், சாஸ்திரங்களையும், உபநிடதங்களையும் கற்றறிந்தவனை விட மேம்பட்டவனாக திகழ்வான்.
ஒருவன் மரணம் அடையும் தருவாயில் ருத்ராட்சத்தை அணிந்திருந்தால், அவன் இறந்த பின் ஆன்மாவானது, ருத்ர லோகத்தை அடையும்.
பிறப்பால் ஒருவன் உயர்ந்தவனோ அல்லது தாழ்ந்தவனோ, சைவ உணவை உண்பவனோ அல்லது அசைவ உணவை உண்பவனோ… யாராக இருப்பினும் ருத்ராட்சம் அணிந்தவன் ருத்ரனுக்கு இணையாகிறான்.
ருத்ராட்சத்தைத் தலையில் சூடியவன், கோடி புண்ணியங்களைப் பெறுவான். காதுகளில் அணிபவன் பத்துகோடிப் புண்ணியங்களைப் பெறுகிறான். கழுத்தில் அணிபவன் நூறு கோடிப் புண்ணியங்களைப் பெறுகிறான்; பூணூலில் அணிபவன் ஆயிரம் கோடிப் புண்ணியங்களைப் பெறுகிறான்; கைகளில் அணிபவன் லட்சம் கோடிப் புண்ணியத்தைப் பெறுகிறான்; இடுப்பில் அணிபவன் மோட்சத்தை அடைகிறான்.
ருத்ராட்சத்தை அணிந்தவாறு, வேத நியமங்களை ஒருவன் கடைப்பிடிப்பானாயின், அவன் பெறும் பலனை அளவிட முடியாது.
கழுத்தில் ருத்ராட்ச மாலையை அணிந்திருப்பவன், இந்த உலக பற்றில் இருந்தும், இன்ப- துன்பங்களில் இருந்தும் விடுபடுகிறான்.
ருத்ராட்சம் அணிந்தவன் சிவபெரு மானைப் போலவே, முப்பத்துமுக்கோடி தேவர்களாலும் வணங்கப்படுகிறான்.
ருத்ராட்சத்தைத் தலையில் தரித்து ஒருவன் நீராடினால், ருத்ராட்சத்தைத் தொட்ட நீர் ஒருவனின் உடலைத் தீண்டுமாயின், அது கங்கையில் நீராடிய புண்ணியத்தை வழங்கும்.
மனிதன் மட்டுமல்ல; ஓரறிவு முதல் ஐந்தறிவுள்ள ஜீவராசிகள் வரை ருத்ராட்சத்தோடு சம்பந்தம் பெற்றால், அவை அனைத்தும் மறுபிறவியில் சிவலோகத்தை அடைந்தே தீரும்.
ருத்ராட்சத்தை தானம் செய்பவர் களுக்கு, அதை அடுத்தவர் அணியும்படி செய்பவர்களுக்கு, இன்னொரு பிறவி இந்த பூமியில் கிடையாது.
இவை அனைத்தும் சிவ மகா புராணத்தில், பார்வதி தேவிக்கு, பரமேஸ்வரன் எடுத்துரைத்தது என்று சொல்லப்படுகிறது.
இந்த கலியுகத்தில் ருத்ராட்சத்தை அணிவதற்கு மிகுந்த மனவலிமை தேவைப்படுகிறது. ருத்ராட்சம் அணிவதை கிண்டல் செய்யவும், தேவையில்லாமல் பயம் காட்டவுமே பலரும் தயாராக இருக்கிறார்கள். ஆனால் அதை அணிய யாருக்கும், எந்த தடையும் இல்லை என்று புராணங்கள் சொல்கின்றன. பெண்கள் மாத விலக்கு நாட்களிலும் கூட ருத்ராட்சம் அணிந்திருக்கலாம்; தாம்பத்தியமும் இதற்குத் தடை அல்ல. ஆகையால் இறைவன் அளித்த அருட் கொடையான ருத்ராட்சத்தை அணிந்து இறைவனை நாடுவோம்.