தலையெழுத்தை திருத்தி அருளும் திருப்பட்டூர் பிரம்மாவை தரிசியுங்கள்.
திருப்பட்டூர் பிரம்மாவைத் தரிசித்தால், நம் தலையெழுத்தையே திருத்தி அருள்கிறார். இனி, நமக்கு நல்லகாலமாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில், திருச்சியில் இருந்து சுமார் 28 கி.மீ. தொலைவில் உள்ளது சிறுகனூர். இங்கிருந்து கிளை பிரிந்து செல்லும் சாலையில், 5 கி.மீ/. தொலைவில் உள்ளது திருப்பட்டூர். சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து பஸ் வசதி உண்டு. சிறுகனூரில் இருந்தும் சிறுகனூரை அடுத்த எம்.ஆர்.பாளையத்தில் இருந்தும் ஆட்டோ வசதி உண்டு. திருச்சியில் இருந்து காரில் ஆலயத்துக்கு வருவதே உத்தமம்.
வாழ்வில் ஒருமுறையேனும் திருப்பட்டூர் வாருங்கள். வாழ்வில் நல்ல நல்ல திருப்பங்கள் நிச்சயம் நம்மைத் தேடி வரும் என்பது உறுதி.
திருப்பட்டூர் தல மகிமையைப் பார்ப்போம்.
கர்வமும் ஆணவமும்தான் முதல் எதிரி. கர்வம் இருக்கும் இடத்தில் அன்பு இருக்காது. ஆணவம் இருந்துவிட்டால், அங்கே மதிப்புமரியாதைக்கு வேலையே இல்லை. தவிர, கர்வத்துடன் எவர் இருந்தாலும், அவருக்கு துயரமும் அழிவும் நிச்சயம். நம்மைப் படைத்த பிரம்மாவுக்கு, அப்படியொரு கர்வம் தலைக்கேறியது. ‘உனக்கு நிகரானவன் நான். உனக்கும் ஐந்து தலை. எனக்கும் ஐந்து தலை’ என்று சிவபெருமானிடம் கொக்கரித்தார் பிரம்மா. அவருக்கும் அகிலத்து மக்களுக்கும் பாடம் நடத்த, தன் விளையாட்டைத் துவக்கினார் சிவபெருமான்.
பிரம்மாவின் ஒரு தலையைக் கொய்தார். கொடுத்த படைப்புத் தொழிலையும் பிடுங்கிக் கொண்டார். துடித்துப் போனார் பிரம்மா. அகங்காரம் தந்த அழிவும் அதனால் பொங்கிய அவமானமும் கலங்கடித்தது பிரம்மாவை! சிவனாரிடம் சரணடைந்தார். ‘அப்பா சிவனே. என்னை மன்னித்துவிடுங்கள். தவறை உணர்ந்தேன். பிராயச்சித்தம் தாருங்கள்’ என மன்றாடினார்.
அதையடுத்து சிவனாரின் அறிவுரைப்படி கடும்தவம் புரிந்தார். அனுதினமும் சிவலிங்க பூஜைகள் செய்து வந்தார். அதன் பலனாக, இழந்ததைப் பெற்றார். ஸ்ரீபிரம்மா உருவாக்கிய தீர்த்தக்கிணறு, பிரம்மதீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. அவர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட 12 தலங்களில் உள்ள லிங்கங்கள், இங்கே பிரம்மபுரீஸ்வரர் கோயிலில், 12 சந்நிதிகளாக, 12 சிறிய ஆலயங்களாக இன்றைக்கும் காட்சி தருகின்றன. இங்கு வந்து தரிசித்தால், 12 தலங்கள் மற்றும் திருப்பட்டூர் தலம் என 13 தலங்களுக்கும் சென்று தரிசித்த பலன்கள் கிடைக்கும். நம் வாழ்க்கையில் இழந்ததையும் தொலைத்ததையும், தேடுவதையும் நாடுவதையும் நிச்சயம் பெறலாம் என்பது ஐதீகம்!
பிரம்மாவுக்கு சாப விமோசனம் தரும் போது, தன் அடியவர்களுக்காக, பக்தர்களுக்காக சிவனார், பிரம்மாவிடம் என்ன சொல்லி அருளினார் தெரியுமா? ‘உன் சாபம் போக்கிய இந்தத் திருவிடத்துக்கு, என்னை நாடி வரும் அன்பர்கள் அனைவருக்கும் விதி கூட்டி அருள்வாயாக!’ என்றார் சிவபெருமான். அதாவது, இங்கே, இந்தத் தலத்துக்கு வரும் பக்தர்களின் தலைவிதியை நல்லவிதமாக, திருத்தி எழுதி, நல்வாழ்வு மலரச் செய்வாயாக என அருளினார் ஈசன். அதன்படி, எவரொருவர் பக்தி சிரத்தையுடன், ஆத்மார்த்தமாக, திருப்பட்டூருக்கு வந்து சிவ தரிசனம் செய்து, பிரம்மா சந்நிதியில் மனமுருகி வேண்டி நிற்கிறார்களோ, அவர்களின் தலையெழுத்தை திருத்தி அருள்கிறார் பிரம்மா.
அதனால்தான் திருப்பட்டூர் வந்தால், நல்லதொரு திருப்பம் நிச்சயம். தேக நலம் கூடும். ஆயுள் அதிகரிக்கும் என உறுதிபடச் சொல்கிறார்கள் பக்தர்கள். நடப்பவற்றுக்கெல்லாம் தானே ஓர் சாட்சியாக இருந்து, தன்னை நாடி வருவோருக்கெல்லாம் அருளையும் பொருளையும் அள்ளித் தந்து வாழவைக்கிறார் ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் என்கிறார் கோயிலின் பாஸ்கர குருக்கள்.
பிரம்மபுரீஸ்வரரை வணங்கிவிட்டு, பிராகாரத்துக்குள் அடியெடுத்து வைத்ததுமே, விமானத்துடன் கூடிய தனிச்சந்நிதியில் உள்ள பிரமாண்டமான பிரம்மாவை கண்ணாரத் தரிசிக்கலாம்.நான்கு முகங்கள். நான்கு தலைகளிலும் அழகிய கிரீடம். நான்கு திருக்கரங்கள். அதில் இரண்டு திருக்கரங்களை மடியில் வைத்துக் கொண்டிருக்கும் அழகே அழகு! மற்றபடி வலது கரத்தில் ஜப மாலை, இடது கரத்தில் கமண்டலம். பத்ம பீடம் என்று சொல்லப்படுகிற, தாமரை மலரில் அமர்ந்து, தவ நிலையில் இருந்தபடி அருள்பாலிக்கிறார்.
பொதுவாக பிரம்மாவுக்கு மஞ்சள்காப்பு செய்து வழிபடுவது சிறப்பு. பிரம்மா குரு அல்லவா. எனவே வியாழக்கிழமையிலும் சிவனாருக்கு உகந்த திங்கட்கிழமையிலும் ஞாயிற்றுக்கிழமையிலும் வந்து வணங்கிச் செல்வது, மிகுந்த பலன்களைத் தரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இங்கே, குரு பிரம்மாவையும் குரு ஸ்ரீதட்சிணாமூர்த்தியையும் பிரம்மாவின் சந்நிதியில் நின்று கொண்டே தரிசிக்கிற பாக்கியமும், இந்த ஆலயத்தின் சிறப்புகளில் ஒன்று.
அதுமட்டுமா? ஸ்ரீபிரம்மாவுக்கு எதிரில் உள்ள தூண்களில் ஒன்றில், ஸ்ரீசனீஸ்வர பகவானின் திருவுருவம், சிற்ப வடிவில் வடிக்கப்பட்டுள்ளது. எனவே இங்கு வந்து தரிசித்தால், சனி தோமும் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
திருப்பட்டூர் வாருங்கள்; பிரம்மாவை தரிசியுங்கள்; வாழ்வில் இனி உங்களுக்கு நல்ல காலமே! நல்ல நல்ல திருப்பங்கள் நிச்சயம்!