தளம் புதிது: படிவங்களுக்கான இணையதளம்
விண்ணப்பப் படிவங்கள் அல்லது ஆவணங்களுக்கான இணையக் காப்பகமாக டைடிபார்ம் இணையதளம் விளங்குகிறது. இந்தத் தளத்தில் பல வகையான படிவங்களைக் காணலாம். எக்செல் கோப்புகள், வேலைவாய்ப்பு விண்ணப்பப் படிவம், வரவு செலவுப் வடிவங்கள் எனப் பல வகையான ஆவண வடிவ நகல்களை இந்தத் தளத்தில் காணலாம். 2,000-க்கும் மேற்பட்ட வகைகளில் 20,000-க்கும் மேற்பட்ட படிவங்கள், ஆவணங்களின் நகல்கள் இந்தத் தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன.
செலவுக் கணக்கு அறிக்கை, வாராந்தர அறிக்கை, இன்வாய்ஸ், குடும்ப பட்ஜெட் எனப் பலவிதமான வடிவங்கள் இந்தப் பட்டியலில் உள்ளன. வர்த்தக தேவை முதல் வாழ்க்கை வரை எல்லா விதமான தேவைகளுக்கும் இவை கைகொடுக்கும்.
பயனர்கள் தங்களுக்குத் தேவையான வகையை கிளிக் செய்து அதில் உள்ள வடிவங்களில் இருந்து தேர்வு செய்துகொள்ளலாம்.
ஒவ்வொரு தலைப்பாக கிளிக் செய்து பார்க்கலாம் அல்லது தேவையான குறிச்சொல்லைக் குறிப்பிட்டுத் தேடிப்பார்க்கலாம். குறிப்பிட்ட ஆவண நகல் வடிவத்தைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்தும் வசதியும் இருக்கிறது.
இணைய முகவரி: https://www.tidyform.com/