தளம் புதிது: புள்ளிவிவரப் புதுமை
புள்ளிவிவரங்கள் வெறும் எண்கள் அல்ல. அவை பல விஷயங்களை உணர்த்தக்கூடியவை. புள்ளிவிவரங்களைப் பல விதங்களில் அணுகலாம். அவை அணுகப்படும் விதத்தில் இன்னும் கூடுதலான புரிதலை அளிக்கக் கூடும். இதற்கு அழகான உதாரணமாக அமைகிறது ‘எவ்ரிசெகண்ட்.இயோ’ இணையதளம்.
இந்தத் தளம், பலரும் நன்கறிந்த ஆப்பிள் நிறுவனத்தின் செயல்பாடுகளை ஒவ்வொரு நொடியிலும் என்ன நடக்கிறது எனும் கண்ணோட்டத்தில் வழங்குகிறது. அதாவது ஆப்பிள் ஒவ்வொரு நொடியிலும் எத்தனை ஐபோன்களை, எத்தனை ஐபேட்களை, எத்தனை மேக் கம்ப்யூட்டர்களை, எத்தனை ஸ்மார்ட் வாட்ச்களை விற்பனை செய்கிறது என்பதை எண்ணிக்கையாக உணர்த்துகிறது.
விற்பனை எண்ணிக்கை மட்டும் அல்ல, அந்நிறுவனத்தின் லாப விவரம், ஆய்வுக்காகச் செலவிப்படப்படும் தொகை, ஐடீயூன்ஸ் மூலம் தரவிறக்கம் செய்யப்படும் பாடல்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களைக் கட்டம் கட்டமாகப் பார்க்க முடிகிறது.
ஒவ்வொரு கட்டத்திலும் அதற்கான ஐகான் கீழே எண்கள், பெட்ரோல் மையத்தில் உள்ள மீட்டரில் ஓடும் எண்கள் போல மாறிக்கொண்டே இருக்கின்றன. இதே வரிசையில் மற்ற நிறுவனங்கள் பற்றிய தகவல்களும் இடம்பெறவிருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.