தவறாக அனுப்பப்பட்ட மெசேஜ்களை திரும்ப பெறும் வசதி: விரைவில் வழங்க வாட்ஸ்அப் திட்டம்

தவறாக அனுப்பப்பட்ட மெசேஜ்களை திரும்ப பெறும் வசதி: விரைவில் வழங்க வாட்ஸ்அப் திட்டம்

வாட்ஸ்அப் மூலம் ஒருவருக்கு அனுப்ப வேண்டியை மெசேஜை தவறுதலாக வேறு ஒருவருக்கு அனுப்பி விட்டீர்களா, விரைவில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்பட இருக்கிறது. நீண்ட காலமாக வாட்ஸ்அப் பயனர்கள் எதிர்பார்த்து வரும் வசதியை அந்நிறுவனம் பீட்டா பதிப்புகளில் வழங்கியுள்ளது. வாட்ஸ்அப் செயலியில் புதிதாய் ரீகால் (Recall) எனும் வசதியினை வழங்கி சோதனை செய்து வருகிறது.

வாட்ஸ்அப் புதிய வசதிகளை முன்னதாகவே பயன்படுத்தும் WABetaInfo வெளியிட்டுள்ள தகவல்களில், ரீகால் எனும் புதிய வசதியை வழங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய வசதியை கொண்டு டெக்ஸ்ட் மெசேஜ்கள், ஜிஃப், டாக்குமென்ட், கோட்டெட் மெசேஜ், ஸ்டேட்டஸ் ரிப்ளை உள்ளிட்டவற்றை அனுப்பிய ஐந்து நிமிடங்களில் திரும்ப பெற முடியும். இதற்கென தனி விண்டோ வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

தற்சமயம் வாட்ஸ்அப் 2.17.190 பதிப்பு பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், 2.17.30+ பதிப்புகளில் புதிய ரீகால் வசதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே அனுப்பிய குறுந்தகவல்களை எடிட் செய்யும் வசதி வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட்டு அதன்பின் திரும்ப பெறப்பட்டு விட்டது.

மாதம் சுமார் 120 கோடி பேர் பயன்படுத்தி வரும் வாட்ஸ்அப் செயலியில், சர்வதேச அளவில் 50 மொழிகளும், இந்தியாவில் 10 மொழிகளில் இயக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்சமயம் 20 கோடி பேர் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.

வாட்ஸ்அப்பில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ரீகால் வசதி விரைவில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், புதிய அப்டேட்டில் மேலும் சில வசதிகள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. முன்னதாக ஐ.ஒ.எஸ். இயங்குதளங்களில் வழங்கப்பட்ட வாட்ஸ்அப் அப்டேட்டில் போட்டோ, வீடியோ மற்றும் ஜிஃப்களில் ஃபில்ட்டர்களை சேர்க்கும் வசதி இடம்பெற்றிருந்தது.

Leave a Reply