தாய்மை விற்பனைக்கு அல்ல
வாடகைத்தாய் முறையை ஒழுங்குபடுத்துவதற்கான சட்ட மசோதா, மத்திய அமைச்சரவையில் இறுதிவடிவம் பெற்றுள்ளது. இந்த மசோதா, இந்த ஆண்டின் இறுதியில் நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட இருப்பதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன.
அரசு பெண் ஊழியர்களுக்குப் பிரசவ விடுமுறை காலத்தை அதிகப்படுத்தியதை அடுத்து வெளிவந்திருக்கும் முக்கியமான அறிவிப்பு இது. அரசு ஊழியர்களுக்குப் பிரசவ கால விடுமுறை அனுமதிக்கப்படுகிறது. வீட்டில் இருக்கும் பெண்களுக்குப் பிள்ளை பெறுவதுதான் பெருங்கடமையென்று அறிவுறுத்தப்படுகிறது. ஆனால் வேலைக்குப் போய் சம்பாதிக்கும் பெண்களுக்கு மட்டும் பிள்ளை பெறுவதற்கு விடுமுறை அனுமதிக்கப்படுவதில்லை. அப்படியே விடுமுறை வாய்ப்புகள் இருந்தாலும் குழந்தைக்காக ஊதியத்தை இழப்பதை தற்போதைய பொருளாதாரச் சுமை அனுமதிப்பதில்லை.
வாடகைத் தொட்டில்
லட்சங்களில் சம்பாதிக்கும் சிலர், குழந்தைக்காக ஊதியத்தை இழக்க விரும்பாமல் வாடகைத் தாய் மூலமாக குழந்தை பெற்றுக்கொள்வதும் நடக்கிறது. பக்கத்து மாநிலமான கேரளத்தில் நடக்கும் இந்தக் கருவறை வாடகைத் தொழிலைப் பற்றி 2008-ம் ஆண்டில் பத்திரிகையாளர் ஜி.பிரஜேஷ்ஸென் ‘மாத்யமம்’ இதழில் ஒரு கட்டுரைத் தொடரை எழுதினார். குழந்தையின்மைக்குச் சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகள் வாடகைத் தாய்மார்களைத் தேடிப்பிடித்துப் பணியில் அமர்த்தும் முகவர்களாகச் செயல்படுவதையும் அவர் அம்பலப்படுத்தினார். அந்தத் தொடருக்கு மருத்துவம், மனித உரிமைகள், புலனாய்வு இதழியல் ஆகிய துறைகளில் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன. விருதுகளைப் போலவே அச்சுறுத்தல்களுக்கும் அவர் ஆளாக வேண்டியிருந்த்து. ‘வாடகைத் தொட்டில்’ என்ற தலைப்பில் புத்தகமாக வெளிவந்த அந்தக் கட்டுரைகளைத் தமிழில் யூமா வாசுகி மொழிபெயர்த்திருக்கிறார். (நல்ல நிலம் வெளியீடு). ‘வாடகைத்தொட்டில்’ கட்டுரைத் தொடரில் விவரிக்கப்பட்டிருக்கும் தகவல்கள் அனைவரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கக்கூடியவை.
வழிகாட்டும் விதிமுறைகள்
குழந்தையை விரும்பும் பெற்றோர்களும் அவர்களது கருவைச் சுமக்கச் சம்மதிக்கும் பெண்ணும் முறையாக ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும். கர்ப்பத்தின் முதல் மாதத்திலிருந்து பிரசவ காலம்வரை ஒரு வருட காலத்துக்கான மொத்தச் செலவுகளுக்கும் பெற்றோர்கள் பொறுப்பேற்க வேண்டும். உணவு, உடை, மருத்துவச் செலவுகளுக்குத் தனியாகப் பணம் கொடுக்க வேண்டும். குழந்தையைச் சுமக்கும் பெண், ஏழாவது மாதத்திலேயே மருத்துவமனையில் சேர்ந்து பிரவசப் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும். வாடகைத்தாயை அமர்த்திய பெற்றோர்களுக்குப் பிரவச தேதியும் நேரமும் முன்கூட்டியே தெரிவிக்கப்பட வேண்டும். நாளையும் நேரத்தையும் தீர்மானிக்கிற உரிமை அவர்களுக்கு உண்டு. அவர்களது உத்தரவைப் பெற்று அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுப்பார்கள். குழந்தை பெற்று முதல் ஒரு மாதத்துக்கு அதைச் சுமந்த பெண் பாலூட்ட வேண்டும். கூடுதலாக மேலும் சில நாட்களுக்குப் பாலூட்டினால் அதற்குத் தனியாகப் பணம் பெறலாம். ஒப்பந்த தேதி முடியும் நாளில் குழந்தையைப் பெற்றோர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
கொடிகட்டும் வியாபாரம்
குழந்தையின்மைக்குச் சிகிச்சையளிக்கும் மையங்கள் என்ற பெயரில் இயங்கும் சில தனியார் மருத்துவமனைகள் இந்த வியாபாரத்தில் கோடிக்கணக்கில் லாபம் ஈட்டுகின்றன. வாடகைத் தாயாகச் சம்மதிக்கும் பெண் அழகான தோற்றம் கொண்டிருக்க வேண்டும் என்பது அவரது அடிப்படைத் தகுதி. மேலும் அவருக்கு ஏற்கெனவே ஒரு குழந்தை இருக்க வேண்டும். கண்டிப்பாக 25 வயதிலிருந்து 35 வயதுக்குள் மட்டும்தான் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் மூன்று லட்சத்திலிருந்து அதிகபட்சமாகப் பத்து லட்சம் வரையில் பெற முடியும்.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் மட்டுமின்றி வெளிநாட்டினரும் இந்திய இளம்பெண்களை வாடகைத் தாய்களாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பானிய தம்பதியொன்று குஜராத் மாநிலம் அகமதாபாதில் ப்ரீதிபென் மேத்தா என்ற பெண்ணை வாடகைத்தாயாக நியமித்தது. முன்பணம் செலுத்திவிட்டு ஜப்பான் சென்ற அந்தத் தம்பதியினர் குழந்தை பிறக்கும் முன்னரே விவாகரத்து செய்துகொண்டனர். பிறந்த பிள்ளையை யாரிடம் கொடுப்பது என்ற சட்டச் சிக்கல் எழுந்து நாடு முழுவதும் விவாதப் பொருளாக மாறியது. உச்ச நீதிமன்றம் குழந்தையை ஜப்பானிய தந்தை வளர்ப்பதற்கு உத்தரவிட்டது.
கேரளமும் குஜராத்தும் இருக்கின்ற இந்தியாவில்தான் தமிழ்நாடும் இருக்கிறது. ஒருபக்கம் பிரசவ வலியைத் தவிர்க்க விரும்பும் இந்திய இளம்பெண்கள், இன்னொரு பக்கம் கருவறையை வாடகைக்குத் தேடும் வெளிநாட்டினர் என்று இரண்டு நிலைகளில் ஏழைப்பெண்கள் ஏமாற்றப்படுகிறார்கள். கருச்சிதைவுகளுக்கான சாத்தியமும் உண்டு என்பதால் அவர்கள் உடலளவிலும் மனதளவிலும் பாதிக்கப்பட நேரிடுகிறது. ஆனால் சில லட்சம் பணத்துக்காகவும் நல்ல உணவுக்காகவும் இதைச் செய்ய சம்மதிக்கிறார்கள்.
இறுதிவடிவம் பெற்றிருக்கும் சட்ட மசோதா, வாடகைத்தாய் முறையைச் சட்டபூர்வமாக அங்கீகரிப்பதோடு இதை வணிகரீதியில் செய்வதைத் தடைசெய்கிறது. வெளிநாட்டினருக்குப் பிள்ளை பெற்றுக் கொடுப்பதைத் தடுக்கிறது. குழந்தையின்மையை நிரூபிக்கும் பெற்றோர்களுக்கு மட்டுமே இந்த வாய்ப்பை வழங்குகிறது.
ஆணின் உயிரணுவையும் பெண்ணின் கருமுட்டையையும் சேர்த்து இன்னொரு கருப்பையில் வளர்க்கும் முறையானது குழந்தையின்மைக்கான சிகிச்சையின் இறுதி முயற்சிகளில் ஒன்று. அது தாயாக விரும்பும் இன்னொரு பெண்ணுக்கு உதவும் கருணையே தவிர தன்னை விலைபேசிக்கொள்ளும் இழிநிலை அல்ல என்பதை அனைவரும் உணர வேண்டும்.