தாவூத் இப்ராஹிம் தம்பி மும்பையில் அதிரடி கைது
மகாராஷ்டிர தொழிலதிபரிடம் போனில் பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் இளைய சகோதரர் இக்பால் கஸ்காரை எட்டு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் தொழிலதிபர் ஒருவரிடம் போனில் பணம் கேட்டு மிரட்டியதாக கடத்தல் மன்னன் தாவூத் இப்ராஹிமின் இளைய சகோதரர் இக்பால் கஸ்கார் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்திய அரசால் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக உள்ள தாவூத் இப்ராஹிமின் இளைய சகோதரர் இக்பால் கஸ்கார் மராட்டிய மாநிலத்தில் வசித்து வருகிறார். துபாயில் இருந்த இவர் சில வழக்குகள் காரணமாக இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டார்.
இந்நிலையில், அம்மாநிலத்தில் உள்ள தொழிலதிபர் ஒருவருக்கு போன் மூலம் ஒரு கும்பலைச் சேர்ந்தவர் பணம் கேட்டு மிரட்டியதாக புகார் பதிவானது. இதனையடுத்து, இந்த வழக்கின் கீழ் தானே நகர போலீசாரால் நேற்றிரவு இக்பால் கஸ்கார் மற்றும் அவனது இரண்டு கூட்டாளிகளை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மூவரும் தானே நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது மூவரையும் எட்டு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்தார்.