தினகரனை கைது செய்ய போலீசார் தீவிரம்: அம்மா அணியின் எதிர்காலம் கேள்விக்குறியா?
அதிமுக அம்மா அணியின் சசிகலா சிறையில் உள்ளதால் தற்போது அந்த அணியின் ஒரே நம்பிக்கை நட்சத்திரமாக உள்ள தினகரனையும் போலீசார் வெகுவிரைவில் கைது செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் அம்மா அணியின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
கடந்த மாதம் 29-ந் தேதி டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்கள் சிலர் தாதகாப்பட்டி உழவர் சந்தை மற்றும் சண்முகாநகர் உள்ளிட்ட பகுதிகளில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக துண்டு பிரசுரம் வினியோகம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் தினகரன் உள்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் எந்த நேரமும் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்களை விரைவில் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையினர் பெங்களூரு, சென்னை உள்பட பல்வேறு இடங்களில் அவர்களை தேடி வருகின்றனர். இதனிடையே பெயர் தெரியாமல் வழக்குப்பதிவு செய்யப்பட்ட பட்டியலில் முக்கிய நிர்வாகிகளை சேர்த்து அவர்களையும் கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.